ADDED : ஜூன் 21, 2024 07:15 AM
கிரானைட் கற்கள் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவியல் துறை சிறப்பு துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அதிகாரிகள், ஜெகதேவிபாளையம் பஸ் ஸ்டாப் அருகில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அங்கு கேட்பாரற்று நின்ற லாரியில், கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி, பர்கூர் போலீசார், கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மனைவி மாயம்; கணவர் புகார்
கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டம், காடையம்பட்டி அடுத்த கள்ளிக்காட்டை சேர்ந்தவர் விஜயசாந்தி, 30; இவருக்கு காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சீனிவாசன், 40, என்பவருடன் கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், குழந்தைகள் இல்லை. இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த மே, 27ல் விஜயசாந்தி மாயமானார். சீனிவாசன் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகாரில், காடையாம்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
கிருஷ்ணகிரி: ஓசூர், பாகலுார் ரோடு, தென்றல் நகரை சேர்ந்தவர் ரீனா, 43; கடந்த, 18ல் அருகிலுள்ள மளிகை கடைக்கு சாமான்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவ்வழியே பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த இரு நபர்கள் ரீனாவின் கழுத்திலிருந்த, 7 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து ரீனா ஓசூர் ஹட்கோ போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
மாடு திருட முயன்ற மூவர் கைது
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 54, விவசாயி; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணியளவில் இவரது வீட்டின் அருகிலுள்ள மாட்டு கொட்டகையில் இருந்து சத்தம் வந்துள்ளது. வீட்டிலிருந்து வெளியில் வந்து பார்த்த முத்தப்பா, கொட்டகையில் கட்டியிருந்த, 3 பசுக்களை மர்ம நபர்கள் திருட முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அந்த மூவரையும் பிடித்த முத்தப்பா, அவர்களை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், மாடு திருட்டில் ஈடுபட்டது, கெண்டிகானப்பள்ளி முனிராஜ், 48, தேன்கனிக்கோட்டை ரமேஷ், 43, மருதனப்பள்ளி ராமகிருஷ்ணன், 38 என தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதலில் 4 பேருக்கு 'காப்பு'
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த மூக்காகவுண்டனுாரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 27. அதே பகுதியை சேர்ந்தவர்கள் பூபாலன், 19, உதயகுமார், 19, சிவனேசன், 19 மற்றும், 17 வயது சிறுவன். இவர்களுக்குள் நிலம் தொடர்பாக கடந்த, 17 இரவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தமிழ்செல்வன் புகார் படி, மத்துார் போலீசார் பூபாலன், உதயகுமார், சிவனேசன் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல பூபாலன் அளித்த புகார் படி, தமிழ்செல்வனையும் போலீசார் கைது செய்தனர்.
கட்டட மேஸ்திரி, பூ வியாபாரி மாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியை சேர்ந்தவர் சிவன், 23, கட்டட மேஸ்திரி. இவருக்கு பர்கூர் அடுத்த சின்னபனமுட்லுவை சேர்ந்த இந்திரா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த அப்பெண்ணின் கணவர், கடந்த 18ல், சிவனிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். மனமுடைந்த சிவன் கடந்த, 19 இரவு மாயமானார். அவரது சகோதரி புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.* பாகலுாரை சேர்ந்தவர் மோகன்குமார், 28, பூ வியாபாரி. கடந்த, 13ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரின் பெற்றோர் புகார் படி, பாகலுார் போசார் விசாரிக்கின்றனர்.
சாலையோர போர்டில் கார் மோதி ஒருவர் பலி
கிருஷ்ணகிரி: கோவை மாவட்டம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் மல்லையன், 56; இவர் நேற்று முன்தினம் இன்னோவா காரில் சென்றுள்ளார். அதிகாலை, 3:30 மணியளவில் கிருஷ்ணகிரியில், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த போர்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கணேஷ் மல்லையன் பலியானார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் கர்நாடக மது கடத்தியவர் கைது
ஓசூர்: தேன்கனிக்கோட்டை எஸ்.ஐ., பட்டு மற்றும் போலீசார் நேற்று வனத்துறை சோதனைச்சாவடி அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை மடக்கி சோதனையிட்டதில், 30 கர்நாடக மது பாட்டில்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து டூவீலரில் வந்த தேன்கனிக்கோட்டை டி.ஜி., தொட்டியை சேர்ந்த பிரபாகரன், 44 என்பவரை கைது செய்து, 2,100 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.