Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் இன்று மாங்கனி கண்காட்சி துவக்கம்

கிருஷ்ணகிரியில் இன்று மாங்கனி கண்காட்சி துவக்கம்

கிருஷ்ணகிரியில் இன்று மாங்கனி கண்காட்சி துவக்கம்

கிருஷ்ணகிரியில் இன்று மாங்கனி கண்காட்சி துவக்கம்

ADDED : ஜூன் 21, 2025 01:14 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், இன்று அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்கி, 25 நாட்கள் நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மா' விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும், 40க்கும் மேற்பட்ட 'மா' வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, கருத்தரங்கம், அரசுப்பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடக்கிறது.

கடந்த, 1992 முதல் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், மாவட்ட விளையாட்டு அரங்கம், தனியார் திருமண மண்டபம் என பல்வேறு இடங்களில் மாங்கனி கண்காட்சி நடந்தது. நடப்பாண்டில், இந்த சிக்கல்களை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள திடலில், சென்றுவர தனித்தனி பாதைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாங்கனி கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு இன்று கோலாகலமாக துவங்குகிறது. அமைச்சர் சக்கரபாணி கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.

இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:

நடப்பாண்டில் 'மா' விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், குறித்த நேரத்தில் மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி திடலில், 32 அரசுத்துறை சார்பில், 50 அரங்குகள், தின்பண்டங்கள், வீட்டு உபகரண பொருட்கள் உள்பட, 80 தனியார் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவைகளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாங்கனி கண்காட்சியில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் சென்று வரும் பாதை, அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் 'வாட்ச் டவர்' அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 'மா' விவசாயிகள் தங்கள் 'மா' வகைகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'மா' விவசாயிகளுக்கென கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, 'மா' விவசாயத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் கூற உள்ளனர்.

அதேபோல மற்ற மாநிலங்களிலிருந்து 'மா' விவசாயிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் புதிய தொழில்நுட்பத்தில் பயன் அடைந்தது குறித்தும் விளக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் அதிகளவு பயிரிடப்படும் ரோஜா வகைகளையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று துவங்கவுள்ள கண்காட்சி தொடர்ந்து, 25 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

கண்காட்சிக்கு வந்து செல்ல வசதியாக, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வருவோர் ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, சின்ன ஏரி மற்றும் பஸ் ஸ்டாண்ட் பின்புற வழியாக, தர்கா அருகிலுள்ள கண்காட்சி திடலுக்கு வர வேண்டும். திரும்பி செல்வோர் டோல்கேட் அருகிலிருந்து சர்வீஸ் சாலை, போக்குவரத்து பணிமனை, புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை நடக்கும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள திடலில், 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா இன்று (சனிக்கிழமை) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. இதில் உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி கலந்து கொண்டு, மாங்கனி கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை எதிரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மேலும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.

எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us