Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சீசன் முடிந்தும் நடத்தப்படாத 'மாங்கனி கண்காட்சி': காலம் தாழ்த்துவதாக கி.கிரி விவசாயிகள் வேதனை

சீசன் முடிந்தும் நடத்தப்படாத 'மாங்கனி கண்காட்சி': காலம் தாழ்த்துவதாக கி.கிரி விவசாயிகள் வேதனை

சீசன் முடிந்தும் நடத்தப்படாத 'மாங்கனி கண்காட்சி': காலம் தாழ்த்துவதாக கி.கிரி விவசாயிகள் வேதனை

சீசன் முடிந்தும் நடத்தப்படாத 'மாங்கனி கண்காட்சி': காலம் தாழ்த்துவதாக கி.கிரி விவசாயிகள் வேதனை

ADDED : ஜூலை 10, 2024 07:26 AM


Google News
கிருஷ்ணகிரி: மா சீசன் முடிந்தும், கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 35,000 ஹெக்டேரில் மா விவசாயம் நடக்கிறது.

கிருஷ்ணகிரியில், மா வகைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் மவுசு அதிகம். கிருஷ்ணகிரி மா வகைகளை காட்சிப்படுத்தும் விதமாகவும், மற்ற மாநில விவசாயிகள் இது குறித்து அறியும் வகையிலும் கடந்த, 1992 முதல் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், 45,000 ஹெக்டேரில் மா சாகுபடி நடந்தது. மழை குறைவு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தற்போது, 35,000 ஹெக்டேராக மா சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடக்கும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், மாவட்டத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிக மகசூல் கிடைக்கும் மா வகைகள் காட்சி படுத்தப்படும். விவசாயிகளுக்கு, மா சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில், வேளாண் அலுவலர்கள் கருத்தரங்குகளையும் நடத்துவர். இது தற்போது, பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நடத்தப்படும் விழாவாக மாறிவிட்டது.நடப்பாண்டிலும் மழையின்றி மா விளைச்சல், 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு பல்வேறு மனுக்கள் அளித்தோம். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மா சாகுபடி விளைச்சல் அதிகரிப்பது, கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, வேளாண் அலுவலர்கள் கூறினர். ஆனால், மா சீசன் முடிந்து, மாதக்கணக்கே ஆன நிலையில், மாங்கனி கண்காட்சி குறித்த அறிவிப்பு இல்லை.மாங்கனி கண்காட்சி நடத்த, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கண்காட்சி நடத்த, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மா விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாங்கனி கண்காட்சியை, பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே, மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமலும், மாங்கனி கண்காட்சியை நடத்தாமல் காலம் தாழ்த்துவதும், வேதனை அளிக்கிறது. இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us