நுரையாக செல்லும் ஆற்று நீரால் கவலை
நுரையாக செல்லும் ஆற்று நீரால் கவலை
நுரையாக செல்லும் ஆற்று நீரால் கவலை
ADDED : ஜன 06, 2024 07:04 AM
ஓசூர் : கெலவரப்பள்ளி அணை தண்ணீரில், தொடர்ந்து வெளியேறும் ரசாயன நுரையால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கெலவரப்பள்ளி அணை உள்ளது. இதன் மதகுகளில் உள்ள ஏழு ஷட்டர்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், 44.28 அடி கொண்ட அணை நீர்மட்டம், 24.33 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர் தென்பெண்ணை ஆற்றில் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலம் நந்திமலையில் மழை பெய்து அதிகளவு உபரி நீர் வரும் போது, அம்மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகளும் ஆற்றில் திறக்கப்படுகிறது. அதனால் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மாசடைகிறது. அணை நீர்மட்டம் தற்போது, 24.33 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணை அடிப்பகுதியில் தேங்கியுள்ள ரசாயனம் கலந்த நீர் முழுவதும், ஆற்றில் வெளியேறி வருகிறது.மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மட்டுமே, தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை ஏற்படும் என்ற நிலை மாறி, தற்போதும் ரசாயன நுரை தேங்குகிறது. இதை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.