ADDED : ஜூன் 17, 2024 01:44 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தென்னை வயல் விழா நடந்தது. கிருஷ்ணிரி வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், இத்திட்டத்தில், இடுபொருட்களை மானிய விலையில் பெறுதல் குறித்தும், மானிய விலையில் இயந்திரங்கள் பெறுதல், விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல், லாபம் ஈட்டுதல் பற்றியும் விளக்கினார். எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், மொபைல்போன் உழவன் செயலி குறித்தும், பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றியும் விளக்கமளித்தார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் ஸ்ருதி, தென்னையில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் மைய கால்நடை மருத்துவர் ரமேஷ், கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய் கட்டுப்படுத்துதல், பாலில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்து எடுத்துரைத்தார். பண்ணை மேலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், பார்வதி செய்திருந்தனர்.