Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கோவில் நிலங்களில் கனிம கொள்ளை

கோவில் நிலங்களில் கனிம கொள்ளை

கோவில் நிலங்களில் கனிம கொள்ளை

கோவில் நிலங்களில் கனிம கொள்ளை

UPDATED : ஜூலை 25, 2024 04:12 AMADDED : ஜூலை 24, 2024 09:22 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கிருஷ்ணகிரி:''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 198 கோடி ரூபாய் அளவிற்கு கனிமவள கொள்ளை நடந்துள்ளதாக, அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை, கிருஷ்ணகிரி அடுத்த பாலேகுளி பெருமாள் கோவில், பட்டாளம்மன் கோவில், தேன்கனிக்கோட்டை அடுத்த நாகமங்கலம் அருகே, நீலகிரி அனுமந்தராயசுவாமி கோவில் நிலங்களில் ஆய்வு செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

பாலேகுளி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 7.04 ஏக்கர் நிலத்தில், 2.74 ஏக்கரிலும், பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான, 5.63 ஏக்கர் நிலத்தில், 1.42 ஏக்கர் அளவிலும் கனிம வளங்களை எடுத்து விட்டு, அதன் கழிவுகளை அங்கே கொட்டி, 4.16 ஏக்கர் நிலத்தை அழித்துள்ளனர்.

கடந்த, 2014 - 15ம் ஆண்டுகளில் கனிம வளத்தை வெட்டி எடுத்து, அதில் மண்ணை கொட்டி மூடி உள்ளனர். இது குறித்து கடந்தாண்டுகளில் வந்த தகவல்கள்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றத்தில், விரிவான அறிக்கை, அரசு சார்பில் சமர்ப்பிக்கப்படும்.

இம்மாவட்டத்தில், கோவில் நிலங்களை அளப்பதிலும், அடையாளம் காண்பதிலும் இருக்கும் சிக்கல்களை தாண்டி, அளவீட்டு பணி நடக்கிறது. இங்குள்ள அனைத்து கோவில் விபரங்களும் இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us