ADDED : ஜூன் 19, 2024 10:34 AM
கிருஷ்ணகிரி: நேற்று முன்தினம் பெய்த கன மழையால், கிருஷ்ண
கிரியில், 60 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை, ஒரு மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 328 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 280 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம், 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 47.10 அடியாக இருந்தது. பாரூர் ஏரியின் முழு கொள்ளளவான, 15.60 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஆனால் ஏரிக்கு நீர்வரத்தும் இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை. அதேபோல், சூளகிரி சின்னாறு அணையில் நீர்வரத்தும், நீர் வெளியேற்றமும், நீர் இருப்பும் பூஜ்ஜியமாக உள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணையின் முழு கொள்ளளவான, 19.60 அடியில், 4.35 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், நீர்வெளியேற்றமும் இல்லை.
நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரியில், 60.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், ராயக்கோட்டை, 29, தேன்கனிக்கோட்டை, 18, கே.ஆர்.பி., அணை, 6.20, தளி, 20, அஞ்செட்டி, 2.40, சூளகிரி, 2, என மொத்தம், 137.80 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.