ADDED : ஜன 28, 2024 10:56 AM
குறுகிய பாலத்தால்
விவசாயிகள் வேதனை
கரூர் அருகே, கோம்புபாளையம் பஞ்., முனிநாதபுரத்தில் புகளூர் வாய்க்கால் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன், பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக, பொதுமக்கள், காவிரியாறு மற்றும் புகளூர் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள், விளை பொருட்ளை அந்த பாலத்தின் வழியாக எடுத்து செல்கின்றனர். ஆனால், பாலம் குறுகியதாக உள்ளதால், விளை பொருட்களை விவசாயிகளால் எடுத்து செல்ல முடியாததால், கடும்
வேதனைக்குள்ளாகின்றனர். மேலும், டூவீலர்களில் செல்கிறவர்களும் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால், புகளூர் அருகே வாய்க்காலில்
கட்டப்பட்டுள்ள, பாலத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்
கழிப்பிடம் திறக்கப்படுமா?
கரூர் அருகே, புலியூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், உப்பிடமங்களம் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக கழிப்பிடம்
கட்டப்பட்டது. இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கழிப்பிடம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் கழிப்பிடம் சிதிலமடையும் நிலையில் உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். உப்பிடமங்களம் சாலையில்
உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடத்தை திறக்க,
புலியூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டியது அவசியம்.
சாலையில் பஸ் நிறுத்தம்
போக்குவரத்து நெரிசல்
கரூர் - ஈரோடு சாலையில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பெரும்பாலும், அந்த சாலை போக்குவரத்து மிகுந்ததாக உள்ள நிலையில், புன்னம் சத்திரம் பஸ் ஸ்டாப்பில், கடைகள், ஓட்டல்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், பஸ்களை டிரைவர்கள், ஸ்டாப்பில் நிறுத்தாமல் சாலை நடுவே நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். குழந்தைகளுடன் வரும் பயணிகள், சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். புன்னம் சத்திரம் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தாமல், சாலை நடுவே பஸ்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.