ADDED : ஜன 08, 2024 11:36 AM
வளைந்த இரும்பு தடுப்புகள்
வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
கரூர் - கோவை சாலை திருக்காம்புலியூர் பகுதியில், சாலையின்
நடுவே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் உள்ள, இரும்பு தடுப்புகள் வளைந்தும், உடைந்த
நிலையிலும் உள்ளது. நாள்தோறும் அந்த சாலை வழியாக
ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், உடைந்த இரும்பு தடுப்புகளை, அகற்றி விட்டு புதிதாக இரும்பு தடுப்புகளை வைக்க வேண்டியது அவசியம். மேலும், ஆங்காங்கே இரவு நேரத்தில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக, ஒளிரும் லைட்களை வைக்க வேண்டும்.
வாகனங்களில் அதிக பாரம்
விபத்துக்கு முன் தடுக்கப்படுமா?
கரூர் நகரப்பகுதியில் சரக்கு வாகனங்களில், அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்கின்றனர். இதனால், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரிகள் அதிகம் செல்லும், கரூர் ஜவஹர் பஜார், திருச்சி மற்றும் கோவை, ஈரோடு, அரசு மருத்துவமனை சாலைகளில், வாகனங்களில் சரக்குகளை மட்டுமல்ல, ஆட்களையும் ஏற்றி செல்கின்றனர்.
இதையும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வது இல்லை.
கரூர் நகரப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க, அதிகளவில் பாரம் ஏற்றி செல்வோர் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
எடுக்க வேண்டியது அவசியம்.
சேலம் - கரூர் பழைய
சாலையை அகலப்படுத்தணும்
கரூரில் இருந்து சேலத்துக்கு வெங்கமேடு, வெண்ணைமலை, செம்மடை வழியாக பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பின், வெங்கமேடு வழியாக, கரூருக்கு வாகனங்கள் செல்வது குறைந்து வருகிறது. இதனால், கரூர் - சேலம் பழைய சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. மேலும், அந்த சாலையில் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால், அடிக்கடி சேலம் பழைய சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதையொட்டி, கரூர் - சேலம் பழைய சாலை வெங்கமேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.