ADDED : ஜன 07, 2024 11:29 AM
தேங்கிய குப்பையால்
மக்களுக்கு தொடர் சிக்கல்
கரூர் - சேலம் பழைய சாலை வெண்ணைமலையில், பொதுமக்கள்
குப்பைகளை சாலையில் கொட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக
தேங்கிய குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, அவை பறந்தபடி உள்ளது. மேலும், அந்த பகுதியில்
உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு சென்று விடுகின்றன. இதனால், வெண்ணைமலை சாலை முழுவதும், இரண்டு பக்கமும் குப்பையாக காட்சியளிக்கிறது. எனவே, தேங்கிய குப்பை
மற்றும் பிளாஸ்டிக் கவர்களை அகற்ற, காதப்பாறை
பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் செல்ல வடிகால்
அமைக்க வேண்டுகோள்
கரூர் - திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில், பொது
மக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் போர்வெல்
அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. மேலும், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, வடிகால் வசதி இல்லாததால், கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில்,
போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை
வைப்பதோடு, வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
சேலம் நெடுஞ்சாலையில்
தடுப்பு வைக்க வேண்டும்
கரூர் - சேலம் நெடுஞ்சாலையில், பல்வேறு கிராமப்பகுதிகளை இணைக்கும் பகுதிகள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. மேலும், சாலை ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. அதற்கு முன் தடுப்புகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரிவது இல்லை. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாப்பாளையம் பிரிவு பகுதியில் நடந்த விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளர். சிலர் இறந்துள்ளனர். எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் வைக்க நடவடிக்கை தேவை.