ADDED : ஜன 03, 2024 12:41 PM
உடைந்த சிலாப்பை
சரி செய்ய வேண்டும்
கரூர்---வெள்ளியணை சாலையில், தான்தோன்றி மலை பிரதான சாலையில், சாக்கடை கால்வாயின், மேல் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், சிலாப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சிலாப் பலகை தடுப்பு உடைந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில், அதிகப்படியான கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து சாலையில் சென்ற வண்ணம் உள்ளது. மேலும், சாலையில் வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயில் உடைந்த நிலையில் உள்ள, சிலாப் பலகைகளை உடனடியாக மாற்றி சரி செய்ய வேண்டியது அவசியம்.
சாலையில் விளக்குகள்
இல்லாததால் அவதி
கரூர் ஐந்து சாலையில் இருந்து, வாங்கல், நெரூர், ஒத்தக்கடை செல்லும் சாலை, பல குக்கிராமங்கள் வழியாக செல்கிறது. இரு பக்கமும் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளது. ஆனால், அந்த சாலையில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை. இதனால், கரூரில் இருந்து வாங்கல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் அவதிப்படுகின்றனர்.
அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. சாலையில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. கரூர் ஐந்து சாலை முதல் வாங்கல் வரை, போதிய தெரு விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகால்
அமைக்க வேண்டும்
கரூர் ஐந்து சாலை பகுதி வழியாக நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், ஏராளமான வீடுகளும் உள்ளன. அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. ஆனால், அப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை பெய்யும் தண்ணீர், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், ஐந்து சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் போது, பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே, மழைநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.