ADDED : ஜன 01, 2024 11:41 AM
சமத்துவபுரம் சாலையில்
தெருவிளக்குகள் தேவை
கரூர் அருகே, வெள்ளியணையில் சமத்துவபுரம் உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேலும், பஸ் ஸ்டாப்பில் இருந்து சமத்துவபுரம் செல்லும் சாலையில், தெருவிளக்குகள் இல்லை. இதனால், அப்பகுதி வழியாக இரவு நேரத்தில், இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம், அந்த சாலையில் அதிகளவில் உள்ளது. இதனால், வெள்ளியணை பஸ் ஸ்டாப்பில் இருந்து, சமத்துவபுரம் செல்லும் சாலையில், தெருவிளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான சாலை
சீரமைக்க கோரிக்கை
கரூர் அருகே, கவுரிபுரம் டாஸ்மாக் கடை சாலை பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதில், ஆயிரத்துக்கும் மேலான, பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே, கவுரிபுரம் குடியிருப்பு பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்ய, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை ஆக்கிரமிப்பு
அகற்ற வேண்டுகோள்
கரூர் அருகே, திருமாநிலையூர் வழியாக திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. ஆனால், அப்பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. விபத்து ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். விபத்தை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில், திருமாநிலையூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.