/உள்ளூர் செய்திகள்/கரூர்/தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புதான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு
தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு
தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு
தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 12, 2024 11:13 AM
கரூர்: கரூர் - திண்டுக்கல் ரயில்வே இருப்புபாதை, மின்மயமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழமையான கரூர் - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில், டீசல் இன்ஜின் மூலம், பயணிகள் ரயில், சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திண்டுக்கல்லில் இருந்து செல்லும் டீசல் ரயில் இன்ஜின், சேலம் அல்லது ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மின்சார இன்ஜினாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், கூடுதல் நேரம் ஏற்படுவதுடன், டீசலை தனியாக ஒரு பெட்டியில் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கரூர் வழியாக ஈரோடு - திருச்சி மற்றும் திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கரூர் - திண்டுக்கல் இடையே, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷன் இயங்கியது. நாளடைவில், ஏழு கிலோ மீட்டர் துாரம் உள்ள கரூர் டவுன் ஸ்டேஷனில் ரயில்கள் நிறுத்தப்படுவதால், தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை.
இதனால், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளியணை அல்லது கரூர் டவுன் ஸ்டேஷனில் இறங்கி வரவேண்டும். இரவு நேரத்தில் அதிகளவில் வெள்ளியணையில் இருந்தும், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும், தான்தோன்றிமலைக்கு பஸ் வசதி கிடையாது. மேலும், தான்தோன்றிமலை பகுதியில் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு கலைக்கல்லுாரி, அரசு அலுவலர் குடியிருப்புகள் உள்ளன.
தற்போது, திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில், கேரளா மாநிலம் பாலக்கோட்டில் இருந்து, பழநி - கரூர், சேலம் வழியாக சென்னை எழும்பூருக்கு ரயில் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இதனால், கரூர் - திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, மீண்டும் ரயில்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.