ADDED : ஜன 07, 2024 11:00 AM
போதையில் விழுந்த
கூலி தொழிலாளி பலி
வேலாயுதம்பாளையம் அருகே, குடிபோதையில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் பழனிசாமி, 57; இவர், கரூர் அருகே புன்னம் சத்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 4ல் பழனிசாமி, புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள பாலம் அருகே, குடி போதையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, பழனிசாமி மனைவி ராணி, 52, கொடுக்க புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணராயபுரத்தில்
உளுந்து அறுவடை
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், மானாவாரி நிலங்களில் உளுந்து அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வரகூர், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மேட்டுப்பட்டி, திருமேனியூர் ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்களில், விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.
உளுந்து பயிர்களுக்கு மழை நீர் கிடைத்ததால், செடிகள் செழிப்பாக வளர்ந்து காய்கள் பிடித்துள்ளது. இதையடுத்து, விவசாய தொழிலாளர்கள் கொண்டு உளுந்து அறுவடை செய்யப்படுகிறது. மேலும் மானாவாரி உளுந்துக்கு ஓரளவு மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பொறியியல் பணிக்கு
எழுத்து தேர்வு தொடக்கம்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு, அரசு கலைக்கல்லுாரியில் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், மாநிலம் முழுவதும் நேற்று ஒருங்கிணைந்த, பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடந்தது. கரூரில், அரசு கல்லுாரியில் நேற்று காலை மற்றும் மதியம் என இரு பிரிவுகளாக எழுத்து தேர்வு நடந்தது. அதில் விண்ணப்பித்து இருந்த, 400 பேரில், 266 பேர் தேர்வு எழுதினர்.
எழுத்து தேர்வையொட்டி, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று, இரண்டாவது நாளாக எழுத்து தேர்வு நடக்கிறது.
பஞ்., துணைத்தலைவருக்கு
மிரட்டல்; பி.டி.ஓ.,மீது வழக்கு
கரூர் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவரை மிரட்டியதாக, பி.டி.ஓ., மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை சூர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 43, வெள்ளியணை பஞ்., துணைத்தலைவராக உள்ளார். இவர் கடந்தாண்டு ஆக., 25ல், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகத்துக்கு, பணி நிமித்தமாக சென்றுள்ளார்.
அப்போது, பி.டி.ஓ., வினோத்குமார், கிராம நல வளர்ச்சி பணிகள் தொடர்பாக செக்கில் ஏன் கையெழுத்து போடவில்லை என கூறி, சிவக்குமாரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சிவக்குமார் கொடுத்த புகார்படி, பி.டி.ஓ., வினோத்குமார் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குளித்தலையில் வாரச்சந்தை
நடத்திட நடவடிக்கை தேவை
குளித்தலையில், வாரச்சந்தை நடத்திட பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குளித்தலை காவிரி நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, புறவழிச்சாலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை என்ற பெயரில் வியாபாரிகள், விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த வாரச்சந்தை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படவில்லை. தரைக்கடை என்ற பெயரில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. தரைக்கடையை ஏலம் விட்டு, நகராட்சி வருவாய் பெற்று வருகிறது. தரைக்கடை நடத்துபவர்களிடம் ஏலதாரர் பணம் வசூல் செய்து வருகின்றனர்.
வாரச்சந்தை என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு, ஏலம் விட்டால் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும். மேலும் சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு பாதுகாப்பு, இடம் ஒதுக்கீடு செய்யப்படும். வியாபாரிகள் கூடுதலாக முதலீடு செய்து, பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக இருக்கும்.
அனைத்து வசதிகளுடன், ஒரே இடத்தில் வாரச்சந்தை நடத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டளை - மாயனுார் சாலை சேதம்
வாகன ஓட்டிகள் அவதி
கட்டளை - மாயனுார் சாலை பல ஆண்டுகளாக, குண்டும், குழியமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், கட்டளை - மாயனுார் சாலை வழியாக நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் உள்ளிட்ட இடங்களுக்கு லாரிகள், கார், வேன்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், பள்ளிகள் மற்றும் அதிகளவில் வீடுகள் உள்ளன. காவிரியாற்றில் உள்ள, நீர்த்தேக்க கிணறுகளுக்கும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கட்டளை முதல் மாயனுார் வரை ரங்கநாதபுரம், கீழமாயனுார் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால், அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, கட்டளை முதல் மாயனுார் வரை, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை, நெடுஞ்சாலை துறை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
சேதமான சமுதாயக்கூடம்
புனரமைக்க வலியுறுத்தல்
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்.,ல், 10க்கு மேற்பட்ட கிராமங்களில், 15 வார்டுகள் உள்ளன. இதில் நான்கு வார்டுகளை உள்ளடக்கிய மேட்டுமருதுாரில், 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து டவுன் பஞ்., அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
மேட்டுமருதுார், கூடலுார் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் நடத்தி வந்தனர். சரிவர பராமரிப்பு இல்லாததால், சமுதாயக்கூடத்தின் சுவர்கள், ஜன்னல் கண்ணாடி, கதவு மற்றும் மின் சாதனங்கள், கழிப்பறை போன்றவை சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுத்தமான குடிநீர் வசதி இல்லை.
அருகில் உள்ள பொது மக்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், நிகழ்ச்சி நடத்த முன்வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, சமுதாய கூடத்தின் சேதங்களை பராமரித்து,ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராயனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கரூர் அருகே, ராயனுாரில் மக்களு டன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
அதில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில், ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. கரூர் மாநகராட்சியில் உள்ள, 45,46,47 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள், ரேஷன் கார்டு, மாத உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும், சுகாதார துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஸ்டாலில் பொதுமக்களுக்கு, ரத்தகொதிப்பு, சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டது. துணை மேயர் தாரணி சரவணன், ஆணையாளர் சுதா, மண்டல தலைவர் கனகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட, பலர் பங்கேற்றனர்.
சந்தையூர் வாரச்சந்தையில்
கால்நடைகள் வரத்து சரிவு
சந்தையூர் வாரச்சந்தையில், கால்நடைகள் வரத்து சரிந்து காணப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரச்சந்தை சனிக்கிழமைதோறும் கூடுகிறது. இங்குள்ள சந்தையில் காய்கறிகள், ஆடு, கோழிகள் விற்கப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்றைய சந்தையில் ஆடு, கோழிகள் குறைவான அளவிலேயே வரத்தானது. 8 கிலோ எடை கொண்ட ஆடுகள் ஒன்று, 5,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகளை வாங்க சந்தியமங்களம், பஞ்சப்பட்டி, சேங்கல், கரூர், தோகைமலை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
மார்கழி மாத தசமியில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்
நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கை அம்மன் கோவிலில், மார்கழி மாத தசமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.
கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் அக்ரஹாரம் துர்க்கை அம்மன் கோவிலில், மார்கழி மாத தசமியையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது.
அதை தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர் அருகே காணாமல் போன
3 மாணவியர் காட்பாடியில் மீட்பு
கரூர் அருகே காணாமல் போன, மூன்று அரசு பள்ளி மாணவியர், காட்பாடியில் மீட்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம், ராயனுார் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வரும், 17 வயதுடைய, மூன்று மாணவியர் கடந்த, 4 ல் காணாமல் போயினர். இதுகுறித்து, மாணவிகளின் உறவினர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியரை தேடி வந்தனர். அதற்காக, இரண்டு தனிப் படைகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று அதிகாலை காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், 3 மாணவியர் நீண்ட நேரமாக சுற்றிக்கொ ண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த, காட்பாடி ரயில்வே போலீசார் மாணவிகளை அழைத்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் மூன்று பேரும், கரூர் ராயனுாரை சேர்ந்த, காணாமல் போன பள்ளி மாணவியர் என தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடி ரயில்வே போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில், தான்தோன்றிமலை போலீசார், மூன்று மாணவியரையும், கரூருக்கு அழைத்து சென்றனர்.
மோசமான நிலையில்
கிராம தார்ச்சாலை
பாப்பகாப்பட்டியில், மோசமான சாலையால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி பஞ்சாயத்தில் திருமேனியூர், கோடங்கிப்பட்டி பிரிவு சாலை முதல் பாப்பகாப்பட்டி பஞ்சாயத்து கிராம நிர்வாகம் அலுவலக பிரிவு வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்கின்றனர். தற்போது பல இடங்களில் சாலை கற்கள் பெயர்ந்து மோசமாக இருக்கிறது. இரவு நேரங்களில் மக்கள் செல்லும் போது தடுமாறுகின்றனர். எனவே, இந்த சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட விரோத மதுபாட்டில்
விற்பனை: ஐவர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றதாக ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் குளித்தலை, பாலவிடுதி, லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றதாக வீரமலை, 58; மணி, 51; சிவக்குமார், 25; பொன்னுசாமி, 42; செல்வம், 47; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேதமான மயான கொட்டகை
சாலை அமைக்க கோரிக்கை
குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., தாளியாம்பட்டி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வரும், மயான கொட்டகை சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மயானத்துக்கு செல்லும் பாதை மண் சாலையாகவும், கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மயான கொட்டகை, மண் சாலையை புதியதாக அமைத்து தரக்கோரி கிராம மக்கள் பஞ்., தலைவர், யூனியன் கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, பொது மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மயான கொட்டகை, தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலையில் வாக்காளர்
விழிப்புணர்வு கோலப் போட்டி
குளித்தலை யூனியன் அலுவலக வளாகத்தில், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடந்தது. இதில், 13 பஞ்சாயத்து மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோலங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சியில் தேர்தல் தனி தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ., ஸ்ரீவித்யா, யூனியன் அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
மக்களை தேடி மருத்துவ
ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், தலைவர் யாஸ்மின் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மதுரை மாவட்டம் மேலுார் மக்களை தேடி மருத்துவ ஊழியர் தனலட்சுமி, அவரது கணவர் செந்தில் ஆகியோரை, தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் மணிமேகலை, பொருளாளர் மெர்சிலின் மேரி, மாவட்ட சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முருகேசன், உதவி செயலாளர் ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
புகழூர் நகராட்சி வாரச்சந்தை
கட்டுமான பணிகள் ஆய்வு
புகழூர் நகராட்சி வாரச்சந்தை கட்டுமான பணிகளை, எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சியில் கலைஞர் தினசரி மற்றும் வாரச்சந்தை பகுதியில், கடைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதை, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ ஆய்வு செய்தார். தொடர்ந்து நான்காவது வார்டு அன்னை நகர் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட, தார்ச் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது, நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் பிரதாபன், பொறியாளர் மலர்கொடி மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.