ADDED : பிப் 25, 2024 03:47 AM
பயனற்ற நிலையில் கழிப்பிடம்
பொதுமக்கள் கடும் அவதி
கரூர்: கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதம் அடைந்துள்ளது.
கரூர் மாவட்டம், கோம்புபாளையம் பஞ்சாயத்து, நொய்யல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, டி.என்.பி.எல்., காகித ஆலையின் சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், 4.90 லட்ச ரூபாய் மதிப்பில், பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் சேதம் அடைந்தது. அதை, பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், நொய்யல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கோம்புபாளையம் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பிரசித்தி பெற்ற கோவில்களின்பெயர்கள் படத்துடன் இடம் பெறுமா?
குளித்தலை: குளித்தலை பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. இதில் கடம்பவனேஸ்வரர் நீலமேக பெருமாள், அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், கருப்பத்துார் சிம்மபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆரா அமுதீஸ்வரர்,ஆர்.டி.மலை விராச்சிலை ஈஸ்வரர், தோகைமலை முருகன், கருப்புசாமி, பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.
திருச்சி மாவட்ட நெடுஞ்சாலை துறையின் மூலம், சிறப்பு வாய்ந்த கோவில்களை படத்துடன் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், கரூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளது. இது பற்றி பொது மக்களுக்கு தெரியும் வகையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோவில் படத்துடன் பெயர் பலகை வைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புஅகற்றும் பணி தீவிரம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., மணப்பாறை நெடுஞ்சாலையில் குப்பாச்சிப்பட்டியில் சாலையின் இருபுறங்களிலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதனால் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட, குளித்தலை நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் உத்தரவின்படி, சாலை ஆய்வாளர் சேகர் தலைமையில் சாலை பணியாளர்கள் மற்றும் பொக்லைன் உதவியுடன் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.