ADDED : ஜூன் 29, 2024 03:12 AM
தொடக்க கல்வி ஆசிரியர்
இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர்: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில், சி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி, ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும். கடந்தாண்டு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட, 12 கோரிக்கைகள் குறித்து விரைவில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வை நிறுத்தாமல், நடத்த துடிக்கும் தொடக்கல்வி துறையை கண்டிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மணிகண்டன், ரகுபதி, ராஜா, இருதயசாமி, செல்வதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு41 பேர் பணியிட மாற்றம்
குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., வருவாய் கோட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய மூன்று தாலுகா அலுவலகத்தில் பணியில் இருந்து வந்த, 86 வி.ஏ.ஓ.,க்களின் கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.
சிலரை பணியிடம் மாற்றம் செய்து, ஆர்.டி.ஓ., தனலட்சுமி நேற்று உத்தரவு பிறப்பித்தார். குளித்தலை தாலுகாவில், 39 வி.ஏ.ஓ.,க்களில் 24 பேரும், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், 24 வி.ஏ.ஓ.,க்களில், 9 பேரும், கடவூர் தாலுகாவில், 23 வி.ஏ.ஓ.,க்களில், 8 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், தாசில்தார்கள் குளித்தலை சுரேஷ், கிருஷ்ணராயபுரம் மகேந்திரன், கடவூர் இளம்பருதி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.
வரதட்சணை கொடுமைகணவர், மாமியார் மீது வழக்கு
கரூர்-
கரூரில், மனைவியிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக கணவர் உள்பட, இரண்டு பேர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் கே.வி.பி., நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் வருண் பிரசாத், 28; இவருக்கும், கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த பிரியங்கா, 25, என்ற பெண்ணுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது, இருவரும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், வருண் பிரசாத், அவரது தாய் வளர்மதி ஆகியோர் பிரியங்கா வீட்டுக்கு சென்று, வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, பிரியங்கா அளித்த புகார்படி வருண் பிரசாத், அவரது தாய் வளர்மதி ஆகியோர் மீது, கரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை விற்பனைக்குவைத்திருந்த இரண்டு பேர் கைது
கரூர்: கரூர் அருகே, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரியகுளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் வெங்கமேட்டை சேர்ந்த சூர்யா, 24, மனோஜ், 24, ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 33 மாத்திரைகள் மற்றும் யமஹா பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகழூர் சிமென்ட் சாலை சேதம்4 பேர் மீது போலீசார் வழக்கு
கரூர்: புகழூர் நகராட்சிக்கு சொந்தமான சிமென்ட் சாலையை சேதப்படுத்தியதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, ஒன்பதாவது வார்டு தெற்கு காந்தி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன், 50; அவரது மனைவி சுமதி, 40; மகன் சதீஸ், 24; மற்றும் அடையாளம் தெரியாத பொக்லைன் டிரைவர் ஆகியோர் கடந்த, 26ல், நகராட்சிக்கு சொந்தமான சிமென்ட் சாலையை அனுமதி பெறாமல் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, புகழூர் நகராட்சி ஆணையாளர் ேஹமலதா கொடுத்த புகார்படி, கண்ணன் உள்பட, நான்கு பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.