ADDED : ஜூன் 08, 2024 02:55 AM
கிருஷ்ணராயபுரத்தில்
கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து கிராமங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலைகளில் தேங்கிய மழை நீர் அகற்றுதல், சுற்றுப்புறத்துாய்மை, கழிவுகள் அகற்றுதல், துாய்மை செய்யப்பட்ட பகுதிகளில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டது. டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவில் உண்டியல் திருட்டுபோலீசில் விவசாயி புகார்
கரூர்,: கரூர் அருகே, கோவில் உண்டியலை இரண்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி கார்வழி பகுதியில் சேஷாயி அம்மன் கோவில் உள்ளது. அதில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த, 6ல் இரவு கோவில் உண்டியலை, இரண்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வமணி, 44, என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாய களத்தில் செடிகள்
அகற்ற வேண்டுகோள்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து மேட்டுப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் அறுவடை செய்யப்படும் விளை பொருட்களை, உலர்த்துவதற்காக களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த களத்தில் எள், சோளம், கம்பு, சூரியகாந்தி, துவரை ஆகியவைகளை வெயிலில் உலர்த்துவதற்கும், தரம் பிரிப்பதற்கும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது விவசாயம் களம் சுற்றி, அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. மேலும் துாய்மை இல்லாததால் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, களத்தை சுற்றி வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைக் திருடியவாலிபர் கைது
கரூர்: கரூரில், பைக் திருடியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழூர் தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 6ல் ஓட்டல் முன்புறம் பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். அதை காணவில்லை இதுகுறித்து, ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார்.
பிறகு, கரூர் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கை திருடியது வெங்கமேட்டை சேர்ந்த சிவஹர்சன், 20, என தெரியவந்தது. இதையடுத்து, சிவஹர்சனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்மழையால் பூக்கள் உற்பத்தி பாதிப்பு
கிருஷ்ணராயபுரம்-
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மழை பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், செக்கணம், எழுதியாம்பட்டி, மாயனுார், காட்டூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் செடிகளில் பூக்கள் பூத்து வருவது குறைந்துள்ளது. மேலும் மழை காரணமாக வரத்தும் சரிந்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.
சின்னரோஜா கிலோ, 140 ரூபாய், விரிச்சிப்பூக்கள் கிலோ, 110 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது.