Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/செய்திகள சில வரிகளில்... கரூர்

செய்திகள சில வரிகளில்... கரூர்

செய்திகள சில வரிகளில்... கரூர்

செய்திகள சில வரிகளில்... கரூர்

ADDED : ஜன 03, 2024 12:36 PM


Google News
டூவீலர் மீது கார் மோதி

கணவர் பலி; மனைவி காயம்

வேலாயுதம்பாளையம் அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவிக்கு காயம் ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், ஆத்துார் குட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் கணேஷ், 46; இவர், நேற்று முன்தினம் மனைவி மல்லிகாவுடன், 41, பழுது காரணமாக ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை தள்ளிக்கொண்டு, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை நாணப்பரப்பு பிரிவு பகுதியில் சென்றார்.

அப்போது, ஓடிசா மாநிலத்தை சேர்ந்த ஆசிஷ் பண்டா, 45, என்பவர் ஓட்டி சென்ற ஹூண்டாய் கார், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேஷ் உயிரிழந்தார். மல்லிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் நற்பணி மன்றம்

ஆங்கில புத்தாண்டு விழா

பசுவை நண்பர்கள் நற்பணி மன்றத்தின், 24 வது ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இசை நிகழ்ச்சி, ஆடல், பாடல் உள் ளிட்ட, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி பரிசு வழங்கினார்.

விழாவில், மன்ற காப்பாளர்கள் பூபேஷ் குமார், கார்த்திகேயன், பொறுப்பாளர்கள் தருண்குமார், கணபதி, லோகேஷ், யுவராஜ், விமல்ராஜ், சுரேஷ் குமார், காளீஸ்வரன், குமரேசன்,

இளவரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மணிப்பூரில் மதுவிலக்கு ரத்து

கள் இயக்கம் நல்லசாமி வேதனை

''மணிப்பூர் மாநிலத்தில், பா.ஜ., அரசு மது விலக்கை ரத்து செய்து இருப்பது வேதனை தருகிறது,'' என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

கரூரில், அவர் நிருபர்களிடம்

கூறியதாவது:

நாட்டில் குஜராத், பீகார், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் மது விலக்கு உள்ளது. அதில், மணிப்பூர் மாநிலத்தில் வருவாயை முன்னிறுத்தியும், கள்ள சாராய பெருக்கத்தை காரணம் காட்டியும், பா.ஜ., அரசு மது விலக்கை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு வேதனை அளிக்கிறது.

தேங்காய் கொப்பரை கொள்முதல் விலையை, 108.60 ரூபாயில் இருந்து, 111.60 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக, அரசு அதிகாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் சாதகமாக அமையும். அரசு கொள்முதல் செய்த, கொப்பரையை, எண்ணையாக மாற்றி, வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், தி.மு.க., கூட் டணி தோற்கும். தடை காரணமாக, தமிழகத்தில் இருந்த கள் இறக்கும் தொழிலாளர்கள், வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

இதனால், கள் மீதான தடையை, நீக்குவதன் அவசியம் குறித்து, அனைத்து கட்சி தலைவர்களையும் விரைவில், சந்திக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்கழி மாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவரு க்கு, மார்கழி மாத சஷ்டியை யொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ் சன ம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி யங்கள் கொண்டு அபிேஷகம் நடந்தது. அதைதொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், மார்கழி மாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கலெக்டர் ஆபீசில் மனு

கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க

(சி.ஐ.டி.யு.,) தலைவர் சுப்பிரமணியம் தலைமை யில், மாட்டு வண்டி தொழிலாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில் கூறியுள்ளதாவது:

கரூர் மாவட்டத்தில், மணல் குவாரி மூடப் பட்டுள்ளதால், 1,000 த்துக்கும் மேற்பட்ட, மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், மாடுகளை பராமரிக்க முடியவில்லை.

இதனால், ஆற்றில் இருந்து நேரிடையாக மணல் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்குரிய அரசு மணல் கிடங்கு விலையான, 700 ரூபாயை செலுத்தி விடுகிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்

நிலக்கடலை சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பத்துார், பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார், பஞ்சப்பட்டி, சிந்தலவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி பணிகளில்

ஈடுபட்டுள்ளனர்.

சாகுபடிக்கு தேவையான தண்ணீர், கிணறுகளில் உள்ளதால் தண்ணீர் பிரச்னை இன்றி சாகுபடி எடுக்கப்படுகிறது. மேலும் குறைந்த செலவு மட்டும் செய்யப்படுகிறது. இதனால்

ஓரளவு வருமானம் கிடைக்கும் என, விவசாயிகள் கூறினர்.

இறுதி வாக்காளர் பட்டியல்

வரும் 22ல் வெளியீடு

கரூர் மாவட்டத்தில் வரும், 22ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்க முறைத்திருத்தம், 2024 பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக, கடந்த அக்., 27ல் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) குளித்தலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில், 2024ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய, இறுதி வாக்காளர் பட்டியல் வரும், 22ல் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை

117 பாட்டில் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 117 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 117 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக கண்ணன், 51; செல்லதுரை, 40; காமராஜ், 59; முருகன், 55; பழனிசாமி, 45; உள்பட, 19 பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

காவலாளியை தாக்கிய

வாலிபருக்கு 'காப்பு'

குளித்தலை அடுத்த துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 42; தனியார் நிறுவன காவலாளி. அதே ஊரை சேர்ந்தவர் பிரகாஷ், 27; கூலித்தொழிலாளி. இவர் கடந்த டிச., 23 இரவு, 9:30 மணிக்கு, கருப்பையாவின் வீட்டுக்கு செல்லும் பொது பாதையை மறித்து, தனது

டூவீலரை நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரகாஷிடம், கருப்பையா கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கருப்பையாவை, பிரகாஷ் தாக்கியுள்ளார். இதுகுறித்து,

கருப்பையா கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார், பிரகாசை கைது செய்தனர்.

இறைச்சி கடைகளால்

தெருநாய் தொல்லை

குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட மீன், ஆடு, கோழி, மாடு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆடுகளை அறுத்து சுத்தம் செய்வதற்காக, நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, ஆடு அறுக்கும் தொட்டி கட்டப்பட்டுள்ளது.ஆனால், இந்த தொட்டியை பயன்படுத்தாமல், இறைச்சி கடைக்காரர்கள் தங்களது கடைகளிலேயே அறுத்து இறைச்சியை

விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், இங்கிருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகளை, அங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை

யிட்டுக்கொண்டு சாப்பிடுகின்றன. அப்போது, சாலையில் தாறுமாறாக ஓடும்போது, வாகன

ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்தவும், இறைச்சி கடைக்காரர்கள் ஆடு அறுக்கும் தொட்டியை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ப.வேலுார் இன்ஸ்பெக்டர் இந்திராணி, ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ரங்கசாமி, கடந்த, 2014ல் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது.

கழிவுநீர் கலந்து வரும் குடிநீரால்

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

அரவக்குறிச்சியில் உள்ள, 15 வார்டுகளிலும் கடந்த வாரம் குடிநீர் திறந்து விடப்பட்டது. குடிநீர் செந்நிறத்தில் கழிவு நீர் கலந்து வந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஏற்கனவே சளி, இருமல், காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகள், இந்த குடிநீரை பிடிக்காமல் தவிர்த்தனர். அரவக்குறிச்சியில் ஏற்கனவே, 15 நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரும் கழிவு நீர் கலந்து வருவதால், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இதை பார்வையிட்டு, துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமகிரிப்பேட்டையில்

திருட்டு லாரி மீட்பு

நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., கப்பலுாத்து கிராமம் பகுதியில், நேற்று காலை முதல் லாரி ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், லாரி உரிமையாளர் பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் லாரி திருடு போனதும் தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர்.

அபயபிரதான ரங்கநாத சுவாமி

வைகுண்ட ஏகாதசி நிறைவு

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம், 13 ல் தொடங்கியது. கடந்த, 23 வரை பகல் பத்து உற்சவம், 22 ல் மோகினி அலங்காரம், 23 ல் பரமபத சொர்க்க வாசல் திறப்பு விழா நடந் தது. ராப்பத்து உற்சவத்தில், உற்சவர் ரங்கநாத சுவாமி, வைகுண்ட நாராயணன் வெண்ணைதாழி கிருஷ்ணன், ராமாவாதாரம், வேணுகோபால் கிருஷ்ணன், வாமன அவதாரம், ராஜதர்பார், வேடுபறி, ஆண்டாள் திருக்கோலம் மற்றும் ஆழ்வார் மோட்சம் ஆகிய அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று மாலை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இத்துடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது.

ராஜ வாய்க்காலில் நீர் நிறுத்தம்

பயிர்கள் பாதிக்கும் அபாயம்

ப.வேலுார் ராஜ வாய்க்காலில், இன்று முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தி வைக்கப்படுவதால், சாகுபடி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலில், சில மாதங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ராஜ வாய்க்கால் நீரை நம்பி, வெங்கரை, ஜேடர்பாளையம், பொத்தனுார், பாண்டமங்கலம், பரமத்தி, ப.வேலுார் நன்செய் இடையாறு, பாலப்பட்டியை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலை, வாழை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த பயிர்களுக்கு தினசரி தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில், ராஜ வாய்க் காலில் நீர்நிறுத்தம் செய்வதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us