/உள்ளூர் செய்திகள்/கரூர்/நெருங்கும் பொங்கல் விழா: சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்நெருங்கும் பொங்கல் விழா: சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்
நெருங்கும் பொங்கல் விழா: சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்
நெருங்கும் பொங்கல் விழா: சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்
நெருங்கும் பொங்கல் விழா: சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்
ADDED : ஜன 11, 2024 11:41 AM
கரூர்: நெருங்கி வரும் பொங்கல் விழாவையொட்டி, சுண்ணாம்பு கல் தயாரிப்பு பணியில், கரூர் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், பொங்கல் பண்டிகை என்றாலே மஞ்சள், கரும்பு வரிசையில், வீடுகளுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்பு கல் நினைவுக்கு வரும். அப்போது, சுண்ணாம்பு கல்லுக்கு பெரும் கிராக்கி ஏற்படும். சுண்ணாம்பு கல்லை உற்பத்தி செய்ய, ஒவ்வொரு ஊரிலும், அதிகளவில் சூளைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் சுண்ணாம்புக்கல் எனப்படும் வெள்ளை கற்கள் சேலம், பெரம்பலுார், திருநெல்வேலி, கரூர், நாமக்கல், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிகளவில் கிடைக்கிறது. இதை சூளையில் வைத்து, ஒரு நாள் வேக வைத்த பிறகுதான், வெள்ளை அடிக்க பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு கல் கிடைக்கும். நாளடைவில் ரெடிமேடான வெள்ளை பவுடர்கள் விற்பனைக்கு வந்து விட்டதால், சுண்ணாம்பு கல்லுக்கு மவுசு குறைந்து விட்டது. இதனால், சுண்ணாம்பு கல் சூளைகளும் குறைந்து விட்டன.
இருப்பினும், கரூர் மாவட்டத்தில் மண் மங்கலம், வேலாயுதம்பாளையம், மாயனுார், வெள்ளியணை, தென்னிலை, புலியூர், பண்டுதகாரன்புதுார், அரவக்குறிச்சி, லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் பொங்கல் விழா வருவதால், சுண்ணாம்பு கல் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக துவங்கியுள்ளன.
இதுகுறித்து, சுண்ணாம்பு சூளை தொழிலாளர்கள் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கரூர் மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வந்தன. அதில், ஆயிரம் தொழிலாளர்கள் வரை ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன், செயற்கையான வெள்ளை பவுடர் விற்பனைக்கு வந்தது. இதனால், சுண்ணாம்பு கல்லுக்கு மவுசு குறைய துவங்கியது. காரணம், சூளையில் தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கல்லை, முதல் நாள் இரவில் பானையில் ஊற வைக்க வேண்டும். பிறகு, மறுநாள் காலை அதை கரைத்து, வடிகட்டி வீடுகளுக்கு அடிக்க வேண்டும். இதனால், கைகளில் எரிச்சலும், அரிப்பும், வலியும் ஏற்படும். இதனால், பொதுமக்கள் எளிமையாக கிடைக்கும், சுண்ணாம்பு பவுடரை விலைக்கு வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர்.
இதனால், சுண்ணாம்பு சூளைகள் மெல்ல மூடு விழா கண்டது. தற்போது, குறைந்தளவில் இரண்டு அல்லது மூன்று பேருடன் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வருகின்றன. அதுவும் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் உற்பத்தி செய்கிறோம். மற்ற நாட்களில் கட்டட வேலைக்கு சென்று விடுவோம். தற்போது சுண்ணாம்பு கல்லை, கட்டுமான தொழில், பட்டுப்புழு பண்ணை, கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினியாகவும் பயன்படுத்த வாங்கி செல்கின்றனர். தற்போது பொங்கல் விழாவுக்காக அதிகளவில் உற்பத்தியை துவங்கியுள்ளோம். ஒரு சிறிய மூட்டை, 250 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.