/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அவசர கதியில் அய்யர்மலையில் ரோப் கார் சேவை துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா? அவசர கதியில் அய்யர்மலையில் ரோப் கார் சேவை துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?
அவசர கதியில் அய்யர்மலையில் ரோப் கார் சேவை துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?
அவசர கதியில் அய்யர்மலையில் ரோப் கார் சேவை துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?
அவசர கதியில் அய்யர்மலையில் ரோப் கார் சேவை துவங்கிய 2வது நாளில் பழுதான பின்னணி விசாரிக்கப்படுமா?
ADDED : ஜூலை 28, 2024 02:47 AM

கரூர்:கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்திலும், செங்குத்தாக, 1,017 படிகள் கொண்டுள்ளது.
அடிவாரத்தில் இருந்து மலையில், 750 மீட்டர் துாரத்தில் கோவில் உள்ளது. இங்கு, 2011ல், 6.70 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் பணிகள் தொடங்கி மந்தமாக நடந்தது.
பணிகளை கோல்கட்டாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.பி.எல்., நிறுவனம் மேற்கொண்டது. 2021ல் வேலை முடிக்கப்பட்டு, பல கட்டங்காக சோதனை ஓட்டம் நடந்தது.
கடந்த, 24ல் ரோப் கார் சேவையை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். ரோப் காரில் ஒரே நேரத்தில் மேல், கீழ் பாதையில் 8 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. கடக்கும் துாரம், 445 மீட்டர். பயண நேரம், 3 - 5 நிமிடம்.
சேவை துவங்கிய மறுநாளே ரோப் கார் பழுதாகி பாதியில் நின்றது. இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின் பக்தர்கள் மீட்கப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ரோப்கார் சோதனை ஓட்டம் நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், துவங்கிய மறுநாளே ரோப் கார் அந்தரத்தில் நின்றதால் பக்தர்கள் பீதி அடைந்தனர்.
ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றும்போது, அங்கு நிலவும் வெப்பநிலை, காற்றின் அளவு உட்பட இயற்கை சூழ்நிலைக்கு ஏற்றவாறு திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அப்படி வடிவமைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அந்த வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமால் ரோப்காரின் சக்கரமும், கம்பியும் தனித்தனியாகப் பிரிந்துள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அய்யர்மலை பகுதியில் எந்த வேகத்தில் காற்று வீசும் என கணித்து, அதற்கு ஏற்பதிட்டமிட்டிருக்க வேண்டும்.
மேலும், ரோப் கார் பணியில், தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எந்த அதிகாரிகள் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி, ரோப் கார் சேவை துவங்கப்பட்டுள்ளது என, வெளிப்படையாகக் கூற அதிகாரிகள் மறுக்கின்றனர். மக்கள் உயிரோடு விளையாடாமல், இதன் உறுதித்தன்மைக்கு உத்தரவாதம் வழங்கி, பின் சேவையை தொடங்க வேண்டும்.
பெயருக்கு நடந்த சோதனை
அனைத்திந்திய ஹிந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலர் பி.கருணாநிதி கூறியதாவது:
அய்யர்மலையில் ரோப் கார் செல்லும் பாதையில், சிறிய மலைக்குன்றுகள் கிடையாது. மலை உச்சியில் ரோப் கார் பழுதாகி நின்றால், அதில் சிக்கியவர்களை மீட்பது கடினம். அவர்களை காப்பாற்ற ஒரே வழி ரோப் கார் பழுதை சரிசெய்ய வேண்டும் அல்லது மீட்புப் படையினர் உதவியுடன் தான் மீட்க முடியும்.
இதில், கம்பியை இழுக்கும் 'வீல்' உயரம் குறைவாக உள்ளது. பலத்த காற்று அடித்தபோது, வீலில் இருந்து கம்பி நழுவி விழுந்ததால் தான் நேற்று முன்தினம் ரோப் கார் நகர முடியாமல் நின்றது.
பெயருக்கு சோதனை நடத்தி, அவசர கதியில் சேவை துவக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.
பக்தர்களுக்கு பாதிப்பில்லை
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் ரோப் கார் பொறியாளர் மாசிமலை கூறியதாவது:
ரோப் கார் இயக்கத்தில் பல பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள், வீல் மிகவும் தரமானவை. மலைப்பகுதியில், 50 கி.மீ.,க்கு மேல் காற்றின் வேகம் இருக்கும் என்பதால், ரோப் கார் இயந்திரத்துடன், காற்றின் அளவை கணிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
40 கி.மீ.,க்கு மேல் காற்று வீசினால், தானியங்கி கருவி ரோப் கார் இயக்கத்தை நிறுத்தி விடும்.
சமூகத்தில் திடீரென பலத்த காற்று வீசியதால், வீலில் இருந்து கம்பி நழுவியதால் ரோப் கார் இயக்கம் நின்றது. அதில், பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவிகள் காரணமாக, ரோப் காரில் சிக்கிய பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.