/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 23, 2025 01:20 AM
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கரூர்,:கர்நாடகாவில், மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என, கரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கரூர் மாவட்ட, விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அதிகாரிகள் பேசிய விபரம்:
விவசாய துறை இணை இயக்குனர் சிவானந்தம்: கோடை உழவு ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது. இதனால், நிலத்தடி நீர் அதிகரிக்கும். எனவே, கோடை மழை பெய்தவுடன், விவசாயிகள் உழவு பணிகளை தொடங்க வேண்டும்.
விவசாயி சுப்பிரமணி: கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகம் பாலைவனமாகிவிடும்.
விவசாயி முருகேசன்: கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள, 326 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பணம் கேட்கின்றனர்.
கலெக்டர்: சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, விளக்கம் கேட்கப்படும்.விவசாயி செல்வராஜ்: வெள்ளியணை குளத்துக்கு, தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் உள்ள, மின் கம்பங்களை வாரியத்தின் செலவில், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.
விவசாயி சுப்பிரமணி: புஞ்சை தோட்டக்குறிச்சியில், விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை மறித்து, கட்டடம் கட்டக்கூடாது.
கலெக்டர்: தாசில்தார், டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்த பிறகு, தார்ச்சாலை அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன்: கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்காத, காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020ல் முன்னாள் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், க.பரமத்தியில் கல் குவாரியில் சிறைபிடிக்கப்பட்ட வழக்கை விரைவாக நடத்த வேண்டும்.
கலெக்டர்: காவல் துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, எஸ்.பி., மூலம் விரைவுப்படுத்தப்படும். மணல் கொள்ளையை தடுக்க, அதற்கான குழு விரைந்து செயல்படும்.
விவசாயி சுப்பிரமணி: கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களில், மாடு கடன் பெறுவதற்காக மனுக்களை கால நீட்டிப்பு செய்ய, 5,000 ரூபாய் கேட்கின்றனர்.
கூட்டுறவு துறை அதிகாரி கந்தராஜா: பணம் கேட்டதாக எழுந்த புகார் மீது, விசாரணை நடத்தப்படும்.
விவசாயி ஜெயராமன்: நடப்பாண்டு பட்ஜெட்டில், கரூர் மாவட்டத்துக்கு சிறப்பு திட்டம் இல்லை. காவிரியாற்றில் மருதுார் கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாசன வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்.
கலெக்டர்: கதவணை தொடர்பான திட்டம் பரிசீலனையில் உள்ளது.
விவசாயி வேலுசாமி: அமராவதி ஆற்றில், அனுமதி இல்லாமல் உள்ள, தனியார் வட்ட கிணறுகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர்: வட்ட கிணறுகளை அகற்ற, நீர்வள ஆதாரத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.
பெரும்பாலான விவசாயிகள், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.