ADDED : பிப் 12, 2024 06:08 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. இவரும், பெங்களூரைச் சேர்ந்த சரத்குமார், 25, என்பவரும், நண்பர்கள். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம், இரவு கலெக்டர் அலுவலகம் வழியாக காஞ்சிபுரம் நகரை நோக்கி வந்தனர்.
அப்போது, காவலான்கேட்டில், மொபைல் போன் பேசியபடியே சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபர் மீது, இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், மூன்று பேரும் கீழே விழுந்தனர். மொபைல் போன் பேசியபடி சாலையை கடந்த நபர், அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
ஆனால், படுகாயமடைந்த விக்னேஷ் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
அங்கு, விக்னேஷ், 20, நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார், மொபைல் போனில் பேசியபடியே சாலையின் குறுக்கே ஓடிய நபரை தேடி வருகின்றனர்.