/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரிகளில் நீர் இருப்பு குறைவால் பாதிப்பு.. 1 லட்சம் ஏக்கர் . நவரை பருவத்திற்கு நீர் இல்லாததால் கவலை ஏரிகளில் நீர் இருப்பு குறைவால் பாதிப்பு.. 1 லட்சம் ஏக்கர் . நவரை பருவத்திற்கு நீர் இல்லாததால் கவலை
ஏரிகளில் நீர் இருப்பு குறைவால் பாதிப்பு.. 1 லட்சம் ஏக்கர் . நவரை பருவத்திற்கு நீர் இல்லாததால் கவலை
ஏரிகளில் நீர் இருப்பு குறைவால் பாதிப்பு.. 1 லட்சம் ஏக்கர் . நவரை பருவத்திற்கு நீர் இல்லாததால் கவலை
ஏரிகளில் நீர் இருப்பு குறைவால் பாதிப்பு.. 1 லட்சம் ஏக்கர் . நவரை பருவத்திற்கு நீர் இல்லாததால் கவலை
ADDED : செப் 01, 2025 11:38 PM

காஞ்சிபுரம் :தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான ஏரிகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால், நவரை பருவ காலமான டிச., - ஜன., மாதங்களில், ஏரி பாசனத்தை நம்பியுள்ள 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்ய, போதிய தண்ணீர் கிடைக்குமா என, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. கடந்தாண்டு, நவ., - டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையின்போது 250 ஏரிகள் முழுதாக நிரம்பின. மற்ற ஏரிகள், 75 சதவீதமும், 50 சதவீதமும் நிரம்பி காணப்பட்டன.
இந்நிலையில், கோடை வெயில் காரணமாக, இந்த ஏரியில் உள்ள தண்ணீர் வேகமாக வற்றியது. இதனால், ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.
மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான உத்திரமேரூர் உட்பட 11 ஏரிகளில் மட்டும், தற்போதும் 75 சதவீதம் நீர் நிரம்பி காணப்படுகிறது.
மற்ற ஏரிகளில் 25 - 50 சதவீதம் என்ற அளவிலே உள்ளது. நடப்பு தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போதிய அளவு மழை பொழிவின்றி, ஏரிகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது.
இதனால், ஏரிகளை நம்பி ஏரி பாசனத்தில் விவசாயம் செய்வோர் பெரிதும் கவலையில் உள்ளனர். இவர்கள், ஆண்டுதோறும் நவரை, சம்பா, சொர்ணாவரி என, மூன்று பட்டங்களில், 1 லட்சம் ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடுகின்றனர்.
அதிகபட்சமாக, நவரை பருவமான டிசம்பர், ஜனவரியில் பயிரிட்டு மார்ச், ஏப்ரலில் அறுவடை செய்வர். நவரை பருவத்தில் மட்டும், 50,000 - 65,000 ஏக்கர் வரை நெல் பயிரிடுவர். இதன் சாகுபடிக்கு பெரும்பாலும், ஏரி பாசனத்தை நம்பியே பல விவசாயிகளும் உள்ளனர்.
அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், மாவட்டத்தின் முக்கிய ஏரிகளும், அதிகம் விவசாயம் செய்யும் பகுதிகளான தென்னேரி, ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம், செவிலிமேடு, ஆற்பாக்கம், தாமல் போன்ற பெரிய ஏரிகளில், குறைந்த அளவிலே தண்ணீர் உள்ளது. பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று ஆறுகளிலும் நீர்வரத்து இன்றி வறண்டு கிடக்கின்றன.
அதனால், இந்தாண்டு டிசம்பர் மாத நவரை பருவத்திற்கு நெல் பயிரிடும் விவசாயிகள், சாகுபடி போதிய நீர் கிடைக்குமா என, கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே இந்தாண்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் நெல் பயிரிட்டு, சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்படும். பல ஏக்கர் நிலங்கள் தரிசாக போகும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
ஏரிகளில் தேவையான சீரமைப்பு பணிகளை செய்துள்ளோம். கரைகள் பலமாகவே உள்ளன. நவம்பர், டிசம்பரில் பெய்யக்கூடிய பருவமழையை எதிர்பார்த்துள்ளோம். பருவமழை கை கொடுத்தால், ஏரிகள் முழு அளவில் நிரம்பும். ஆழ்துளை கிணறு கிடைக்கும் தண்ணீரை வைத்து, சில விவசாயிகள் நெல் சாகுபடி செய்வர். மற்றவர்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனினும், முக்கிய ஏரிகளில் தண்ணீரை கொண்டு வர முயற்சிப்போம். அதற்கும்கூட பருவமழை பெய்தால் தான் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.