/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பருவமழை துவங்கியதுமே நிரம்பும் நீர்நிலைகள் அலட்சியம் கூடாது அரசு முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து பருவமழை துவங்கியதுமே நிரம்பும் நீர்நிலைகள் அலட்சியம் கூடாது அரசு முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து
பருவமழை துவங்கியதுமே நிரம்பும் நீர்நிலைகள் அலட்சியம் கூடாது அரசு முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து
பருவமழை துவங்கியதுமே நிரம்பும் நீர்நிலைகள் அலட்சியம் கூடாது அரசு முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து
பருவமழை துவங்கியதுமே நிரம்பும் நீர்நிலைகள் அலட்சியம் கூடாது அரசு முன்னெச்சரிக்கை எடுக்காவிட்டால் ஆபத்து
UPDATED : அக் 21, 2025 10:44 PM
ADDED : அக் 21, 2025 10:40 PM

பருவமழை துவக்கத்திலேயே கன மழையால் குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன. பருவமழை தீவிரமாவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், பருவமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங் கிவிட்டது. இரண்டு நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை தீவிரமடையும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிடுகிடு உயர்வு இந்நிலையில், பருவமழை துவங்கிய நிலையிலேயே காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. காஞ்சிபுரத்தில் 14 ஏரிகள் நிரம்பிவிட்டன. தொடர்ந்து மழை பெய்தால், 100க்கும் மேற்பட்ட ஏரிகள், அடுத்த சில நாட்களில் நிரம்பும் வாய்ப்பு இருப்பதாக நீர்வளத் துறையினர் கூறுகின்றனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. கனமழையால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று காலை 6:00 மணி நிலைவரப்படி, கொள்ளளவு 2.65 டி.எம்.சி.,யாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 800 கன அடி நீர் வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகில் இருந்து, 100 கன அடி நீர் நேற்று மாலை திறக்கப்பட்டது.
மேலும், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், படிப்படியாக உபரி நீர் வெளியேற்றத்தின் அளவை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், உபரி நீர் செல்லும் வழியில் உள்ள கிராமங்கள் மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஏரிகளின் உபரிநீர் மற்றும் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீர் அனைத்தும், அடையாறு ஆற்றின் வழியே கடலை சென்றடையும்.
தொடர்கதை அடையாறு ஆறு, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே துவங்கி, 42 கி.மீ., பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே கடலை சென்றடையும். ஆண்டுதோறும் இந்த கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளான மணிமங்கலம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, ஸ்ரீபெரும்புதுார் ஏரி ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன.
வரதராஜபுரம், முடிச்சூர் பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க, படப்பை அருகே, ஒரத்துாரில் அடையாறு கால்வாய் குறுக்கே, ஒரத்துார் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்கத்தில் 420 மீட்டர் நீளத்திற்கு கரை அமைக்க பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சி எடுக்காததால், இந்த வழியே நீர்த்தேக்கத்தின் உள்ளே வரும் வெள்ள நீர், அடையாறு ஆற்றில் வெளியேறுவதால், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
12,000 கன அடி இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி கூறிய தாவது:
அடையாறு ஆற்றில் வெள்ள நீர் விரைவாக வெளியேற ஆதனுார் முதல் திருநீர்மலை வரை, 11 கி.மீ., கால்வாயை துார்வாரி பலப்படுத்தி உள்ளோம்.
வரதராஜபுரம் பகுதியில், 7 கி.மீ., நீளத்திற்கு அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்தி, 3 அடி உயர்த்தி உள்ளோம். இதன் வாயிலாக வினாடிக்கு, 12,000 கன அடி வெள்ள நீர் தடையின்றி வெளியேறும்.
அதற்கு மேல் தண்ணீர் சென்றால் பாதிப்பு ஏற்படும். வெள்ள பாதிப்பை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -


