ADDED : மார் 17, 2025 12:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலைகளால் இந்த சாலையில் போக்குவரத்து மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்பதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், ஒரகடம் அருகே, மாத்துார் பகுதியில் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சதுடன் சென்று வருகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.