Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் புறநகரில் காலி வீட்டு மனைகளின் விலை...தாறுமாறு:ரூ.600 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் எதிரொலி

காஞ்சிபுரம் புறநகரில் காலி வீட்டு மனைகளின் விலை...தாறுமாறு:ரூ.600 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் எதிரொலி

காஞ்சிபுரம் புறநகரில் காலி வீட்டு மனைகளின் விலை...தாறுமாறு:ரூ.600 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் எதிரொலி

காஞ்சிபுரம் புறநகரில் காலி வீட்டு மனைகளின் விலை...தாறுமாறு:ரூ.600 கோடி பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் எதிரொலி

UPDATED : செப் 03, 2025 02:13 AMADDED : செப் 03, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் புறநகரில், 600 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டப் பணி நடந்து வருவதால், அப்பகுதிகளில் வீட்டு மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சதுரடி 2,500 முதல் 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது,
Image 1464182


ஓரிக்கை, செவிலிமேடு போன்ற இடங்களில் 1,200 சதுரடி மனை 40 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி உருவாக்கப்பட்ட பின், வளர்ச்சி திட்டப் பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. அதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் புறநகர் பகுதியில், 300 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டமும், 300 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், அப்பகுதிகளில் வீட்டு மனைகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

பொதுவாக, 'செப்டிக் டேங்க்' உடன் வீடு கட்டுவோருக்கு, கட்டுமான செலவு அதிகம் ஏற்படும். தவிர, கழிவுகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

அதுவே, பாதாள சாக்கடை இணைப்பு பகுதியாக இருந்தால், அவர்களுக்கான செலவு குறையும். தவிர, நிலத்தில் கழிவுகள் தேங்கி பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும்.

அதனால், காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, தேனம்பாக்கம், திருக்காலிமேடு, நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், கோடிக்கணக்கான ரூபாயில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளால், அப்பகுதியில் மனைகளின் விலை அதிகரித்துள்ளது.

அரசு வழிகாட்டி மதிப்பீடு ஒரு சதுரடிக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை இருந்தது.

கடந்த 2023ல், வழிகாட்டி மதிப்பீடு குறைந்தபட்சமாகவே 30 சதவீதம் உயர்ந்து, காஞ்சிபுரம் நகரின் அடிப்படையான இட மதிப்பீடு ஒரு சதுரடி 886 ரூபாய்க்கு உயர்ந்தது. அப்போது, வீட்டு மனைகளின் விலை சற்று உயர்ந்தது. வழிகாட்டி மதிப்பீட்டைவிட சந்தை மதிப்பீடு 4 முதல் 5 மடங்கு விலையில் உள்ளது. சதுரடி 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விற்கப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம் புறநகர் பகுதிகளில், 600 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நடந்து வருவதால், சதுரடி விலை 4,000 முதல் 5,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது, 1,200 சதுரடி உடைய வீட்டு மனைகள், 40 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

Image 1464190


செவிலிமேடு, ஓரிக்கை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம், கலெக்டர் அலுவலகம் சுற்றிய பகுதிகள், தாறுமாறான விலையில், வீட்டு மனைகள் விற்கப்படுவதால் வீடு கட்ட திட்டமிடும் சாமானியர், இதுபோன்ற விலை உயர்வு காரணமாக, இடம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் 77 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டமும், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 35 கோடி ரூபாயில் குடிநீர் திட்டங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதனால், இப்பகுதிகளிலும் வீட்டு மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

சொந்தமாக வீடு இல்லாததால், நாங்கள் ஓரிக்கை சுற்றிய பகுதிகளில் வீட்டு மனை பற்றி விசாரித்தோம். 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை கூறுகின்றனர். பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதால், கூடுதல் வசதி இருப்பதாக இட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மனை வாங்க யோசிக்கிறோம்.
- ஆர்.பூபதி, காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் புறநகரில்

வீட்டு மனைகளின்

உத்தேச விலை விபரம் இடம் விலை (ரூபாயில்) ஓரிக்கை 40 - 50 லட்சம் செவிலிமேடு 35 - 60 லட்சம் நத்தப்பேட்டை 35 - 40 லட்சம் திருக்காலிமேடு 35 - 45 லட்சம் தேனம்பாக்கம் 40 - 50 லட்சம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us