/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிறு, குறு தொழில் முனைவோர் எண்ணிக்கை... ஏறுமுகம்! மூன்று ஆண்டுகளில் 7,409 நிறுவனங்கள் பதிவுசிறு, குறு தொழில் முனைவோர் எண்ணிக்கை... ஏறுமுகம்! மூன்று ஆண்டுகளில் 7,409 நிறுவனங்கள் பதிவு
சிறு, குறு தொழில் முனைவோர் எண்ணிக்கை... ஏறுமுகம்! மூன்று ஆண்டுகளில் 7,409 நிறுவனங்கள் பதிவு
சிறு, குறு தொழில் முனைவோர் எண்ணிக்கை... ஏறுமுகம்! மூன்று ஆண்டுகளில் 7,409 நிறுவனங்கள் பதிவு
சிறு, குறு தொழில் முனைவோர் எண்ணிக்கை... ஏறுமுகம்! மூன்று ஆண்டுகளில் 7,409 நிறுவனங்கள் பதிவு
ADDED : ஜூன் 17, 2024 04:05 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொழில் முனைவோர் மூன்று ஆண்டுகளில், 7,409 ஆக அதிகரித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், கோவில்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் பெயர் பெற்று விளங்குவது போல, தொழில் துறைக்கும் பெயர் பெற்றது.
சிறிய நிறுவனங்கள் நடத்துவோர், தங்களை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்றிக் கொள்ள, மாவட்ட தொழில் மையத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து கொள்கின்றனர்.
பங்களிப்பு
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை பார்க்கும்போது, மூன்று ஆண்டுகளில், தொடர்ந்து அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. குறைந்த மூலதனத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதே இத்துறையின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் மொத்த தொழில்களின் பொருளாதார வளர்ச்சியிலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய மொத்த உற்பத்தியில் 8 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன.
நாட்டில் 2.6 கோடி நிறுவனங்கள் வாயிலாக, 6 கோடி பேருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கின்றன.
தமிழகத்தில், 15.07 சதவீதம் அதாவது 6.89 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவை 32,008 கோடிக்கு மேலான மொத்த முதலீட்டில், 8,000 வகையான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021- - 2022ம் ஆண்டில், 17,379 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதைத் தொடர்ந்து, 2022 --- -23ல், 2,513 நிறுவனங்கள் அதிகரித்து, 19,892 நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டன.
அதிக உற்பத்தி
கடந்த 2023- - 24ல், கடந்த மார்ச் வரை, 4,896 நிறுவனங்கள் அதிகரித்து 24,788 நிறுவனங்கள் பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும், 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேளாண் பொருட்கள்உற்பத்தி, கனிமம், குவாரி,உணவு பொருட்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி, ரசாயனம், மரப்பொருட்கள் தயாரித்தல், ரப்பர் பொருட்கள் தயாரித்தல் போன்றவை அதிக நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மிகப்பெரிய அளவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளும், ரசாயனம், கண்ணாடி, மருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் செயல்பட்டாலும், பலரும் சொந்தமாக நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன்மூலம் பலருக்கு வேலை அளிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் நடத்த துவங்கிவிட்டனர்.
கடன் வழங்கல்
மாவட்ட தொழில் மையத்தில், மத்திய அரசின்உதயம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்து இயங்கும் நிறுவனங்களுக்கு, வங்கி கடன், மின் வாரிய கட்டண சலுகை, உள்ளாட்சிகளில் அனுமதி என பல்வேறு சலுகைகள் கிடைக்கும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மையம் கவனிக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட தொழில் மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் முனைவோருக்கு, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமும், பிரதமரின் குறு உணவு பதப்படுத்துதல் முறைப்படுத்தும் திட்டம், தமிழக அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டங்களில், ஜெராக்ஸ் கடை வைப்பதும், துணி உற்பத்தி செய்வது, உணவகம் என, பல்வேறு தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
புதிதாக தொழில் துவங்கினாலும், ஏற்கனவே தொழில் நடத்தி வந்தாலும், உதயம் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
சிரமப்பட வேண்டாம்
அவ்வாறு, பதிவிடுவதன் மூலம், அரசின் சலுகை, கடன், வட்டி மானியம், மின் கட்டண சலுகை என அனைத்தும் பெற முடியும்.
காஞ்சிபுரம் மாவட்டம்சென்னைக்கு மிக அருகில் உள்ள மாவட்டம் என்பதால், வணிக ரீதியாகவும், பொருட்களை வாங்கவும், விற்கவும் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை.
இதனால், சிறு, குறு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உதயம் இணையதளம் போலவே போலியான இணையதளங்கள் உள்ளன. அவற்றை தொழில் முனைவோர் சரியாக கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.