Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தினம் தலைதுாக்கும் பாதாள சாக்கடை பிரச்னையால்... தலைவலி மாதம் 500 புகார்கள் வருவதால் மாநகராட்சி திணறல்

தினம் தலைதுாக்கும் பாதாள சாக்கடை பிரச்னையால்... தலைவலி மாதம் 500 புகார்கள் வருவதால் மாநகராட்சி திணறல்

தினம் தலைதுாக்கும் பாதாள சாக்கடை பிரச்னையால்... தலைவலி மாதம் 500 புகார்கள் வருவதால் மாநகராட்சி திணறல்

தினம் தலைதுாக்கும் பாதாள சாக்கடை பிரச்னையால்... தலைவலி மாதம் 500 புகார்கள் வருவதால் மாநகராட்சி திணறல்

ADDED : ஜூன் 23, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்னை நாளுக்கு நாள் தலைதுாக்குகிறது. மாதம் 500க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதால் செய்வதறியாமல் மாநகராட்சி திணறுகிறது. பாதாள சாக்கடை திட்ட பழைய குழாய்களை மாற்றி அமைத்து, உரிய பணிகளை மேற்கொள்ள, 200 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியது. ஓராண்டிற்கும் மேலாக நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, நான்கு மண்டலங்களில், 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 40 வார்டுகளில், 21,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சுகாதார சீர்கேடு


வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர், நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கும், நகரில் நான்கு உந்து நிலையங்களுக்கும், ஆறு நீரேற்று நிலையங்களுக்கும் குழாய் வாயிலாக அனுப்பப்படுகிறது.

பாதாள சாக்கடையில் ஏற்படும் உடைப்பு, கழிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்ட பணிகளை தனியார் நிறுவனம் வாயிலாக, மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்காக அந்நிறுவனத்திற்கு, ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியாததால், நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுவது, தினம் நடக்கும் நிகழ்வாக உள்ளது.

பேருந்து நிலையம், ரங்கசாமிகுளம் அருகே வெங்கடேச பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அப்பகுதி வீடுகளை சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

தீர்வு எட்டப்படவில்லை


இருப்பினும், மாநகராட்சியின் 9, 23, 13 உள்ளிட்ட பல வார்டுகளில், பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வே எட்டப்படவில்லை.

வேறு வழியின்றி, சாக்கடை நீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலைக்கு பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 10 இடங்களிலாவது பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் 1 அடி உயரத்திற்கு தேங்குவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளன.

மாதம் 500க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதால், செய்வதறியாமல் மாநகராட்சி திணறுகிறது. தற்காலிக தீர்வாக, கழிவுநீர் உறிஞ்சும் லாரிகளை அனுப்பி, சாக்கடை நீர் அகற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியில் உள்ள 40 வார்டுகளிலும், 1975ல் கொண்டு வந்த பாதாள சாக்கடை திட்டம், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. அப்போதிருந்த வீடுகளின் எண்ணிக்கையைவிட தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால், பழைய குழாய்களை அகற்றி புதிதாக அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

தவிர, மழைநீர் வெளியேற வழியில்லாத இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் தண்ணீர் விட உடைக்கப்பட்டுள்ளது. அதனாலும், அவ்வப்போது பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது.

அந்த வகையில், கழிவுநீர் அடிக்கடி வெளியேறும் வார்டுகளில் முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், குழாய்களை மாற்றவும், 200 கோடி ரூபாய் நிதி வழங்க கருத்துரு தயாரித்து, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிக்காக காத்திருப்பு


இது சம்பந்தமாக கடிதமும் எழுதி உள்ளோம். இந்த நிதி கிடைத்ததும், மாநகராட்சி முழுதும் பாதாள சாக்கடை பிரச்னைகள் சரிசெய்யப்படும்.

தவிர, மாநகராட்சியுடன் 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உலக வங்கி நிதி 300 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சட்ட விரோத இணைப்புகள்

மாநகராட்சி முழுதும், 21,000 பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், சட்டவிரோத பாதாள சாக்கடை இணைப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பிரச்னைகளாலேயே, பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, வார்டு முழுதும் கழிவுநீர் வெளியேற முடியாமல் போகிறது.சட்டவிரோத இணைப்புகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அரசியல்வாதிகள் அதற்கு துணை போவதாலேயே, கழிவுநீர் பிரச்னை நாளுக்கு நாள் தலைதுாக்குகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us