/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்... சுணக்கம்!:ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்... சுணக்கம்!:ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்... சுணக்கம்!:ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்... சுணக்கம்!:ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்தவர்... சுணக்கம்!:ஆறுவழிச் சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 01, 2024 11:32 PM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டிய மேம்பாலங்களின் கட்டுமான பணியை ஒப்பந்ததாரர் முடிக்காமல் சுணக்கம் காட்டி வருவதால், ஆறுவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழி சாலையாகவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன.
மதுரவாயல்- - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் 2022ம் ஆண்டு பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும்.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் - -காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம், 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, காரப்பேட்டை- - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும்.
கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நெருங்கியும் முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் - -ஒரகடம் கூட்டுச்சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை அறவே துவக்கவில்லை.
இதுதுவிர, சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுபாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டியுள்ளனர். வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, சாய் தள வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், சாலை விரிவாக்க இடங்களில், ஒருவழி பாதையாக மாற்றிய இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னைக்கு செல்லும் பல்வேறு தரப்பினர் தீராத போக்குவரத்து நெரிசலால் சிக்கி பரிதவித்து வருகின்றனர். சில நேரங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலங்கள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாலத்தின் இரு புறமும் சாய் தளத்தில், கல் துகள்கள் கொட்ட வேண்டும். ஒப்பந்ததாரர் கூடுதல் செலவாகும் என, அடம் பிடிப்பதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
மேம்பாலப் பணி நடைபெறும் பகுதியிலேயே கல் அரவை நிலையம் அமைக்க ஒப்புதல் கேட்டுள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கி விரைவாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.