ADDED : ஜூன் 28, 2025 01:35 AM

காலுார்:காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கும் ஆப்பரேட்டர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலுார் ஊராட்சி, வேடல் கிராமத்தில் நேற்று நடந்தது.
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மற்றும் துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில் நடந்த இம்மருத்துவ முகாமிற்கு, காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர் கொடி குமார் தலைமை வகித்தார்.
காலுார் ஊராட்சி தலைவர் சகுந்தலா சங்கர், வட்டார சுகாதார ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் அருள்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹீமோகுளோபின் அளவு, காசநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்தனர்.
முகாமில், மொத்தம் 127 பேர் பங்கேற்றனர். இதில் ஆறு பேருக்கு கண்புரையும், இரண்டு பேருக்கு உயர் ரத்த அழுத்தம், ஐந்து பேருக்கு நீரிழிவு, ஒருவருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்கள் மேல் சிகிச்சைக்காக, திருப்புட்குழி மருத்துவமனைக்கு வந்து தொடர் சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, மலேரியா ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.