Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/எல்.இ.டி., விளக்குகளால் ரூ.10 லட்சம் மின் கட்டணம்...மிச்சம்!:ரூ.12 கோடி திட்டத்தால் மாநகராட்சிக்கு செலவு சரிவு

எல்.இ.டி., விளக்குகளால் ரூ.10 லட்சம் மின் கட்டணம்...மிச்சம்!:ரூ.12 கோடி திட்டத்தால் மாநகராட்சிக்கு செலவு சரிவு

எல்.இ.டி., விளக்குகளால் ரூ.10 லட்சம் மின் கட்டணம்...மிச்சம்!:ரூ.12 கோடி திட்டத்தால் மாநகராட்சிக்கு செலவு சரிவு

எல்.இ.டி., விளக்குகளால் ரூ.10 லட்சம் மின் கட்டணம்...மிச்சம்!:ரூ.12 கோடி திட்டத்தால் மாநகராட்சிக்கு செலவு சரிவு

ADDED : ஜன 26, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 12 கோடி ரூபாய் மதிப்பில், 12,000 தெரு விளக்குகள் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், மாதந்தோறும் 20 லட்சம் ரூபாய் மின் கட்டணம், 10 லட்சம் ரூபாயாக குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் நகராட்சிநிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், மாநகராட்சி, நகராட்சி ஆகிய நகரங்களில் மின் நுகர்வையும் அதனால் ஏற்படும் மின் கட்டணத்தை குறைக்கவும், தெரு விளக்குகளில், எல்.இ.டி., பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ரூ.20 லட்சம் மின் கட்டணம்


அதன்படி, நகர்ப்புற உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022- - 23ம் நிதியாண்டின் கீழ், 12.6 கோடி ரூபாய் மதிப்பில், எல்.இ.டி., மின் விளக்குகளை பொருத்துவதற்கான உத்தரவுகளையும், நிதி ஒதுக்கீட்டையும், நகராட்சி நிர்வாகத் துறை கடந்தாண்டு வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில், எல்.இ.டி., விளக்குகள் ஒவ்வொரு தெருவிலும் பொருத்தும் பணிகள் ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரையில், 36 சதுர கி.மீ., பரப்பளவில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,008 தெருக்கள் உள்ளன.

இதில், 12,276 தெரு விளக்குகள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. இவை, 40 வாட்ஸ் கொண்ட குழல் விளக்குகளாக இருந்தன. இவற்றையே 20 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி., விளக்குகளாக மாற்றி வருகின்றன.

மொத்தமுள்ள, 12,000 தெரு விளக்குகளில், இதுவரை 8,000 விளக்குகள் எல்.இ.டி., திறன் கொண்ட விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

புதிய கன்ட்ரோலர்கள்


மீதமுள்ள, 4,000 விளக்குகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் மாற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சியில் உள்ள தெருவிளக்குகள் பயன்பாடு காரணமாக, மாதந்தோறும் மின் வாரியத்துக்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படுவதால், மின் கட்டண செலவு பாதியாக குறைந்து, மாதம் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கட்ட வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி தெருக்களில் உள்ள குழல் விளக்குகள் மட்டுமல்லாமல், சோடியம், பாதரசம், சி.எப்.எல்., விளக்குகளையும் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றி வருகிறோம்.

பிப்ரவரி இறுதிக்குள் இப்பணி முடிந்துவிடும். அதேபோல, மாலை 6:00 மணிக்கு மின் விளக்குகள் தானாக எரியும் வகையில், ஆட்டோ கன்ட்ரோலர் பல இடங்களில் உள்ளன.

அந்த இயந்திரங்களும் பழையதாகி விட்டதால், புதிய கன்ட்ரோலர்கள் பொருத்தி வருகிறோம். இதனால், தடையின்றி மின் விளக்குகள் எரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிச்சம் குறைவு தான்


காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த, 40 வாட்ஸ் திறன் கொண்ட குழல் விளக்குகள் மிகுந்த வெளிச்சத்துடன் செயல்படும்.மின் கட்டணம் குறைவு காரணமாக, 20 வாட்ஸ் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படும் நிலையில், அதன் வெளிச்சம் சற்று குறைவாக இருப்பதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். குழல் விளக்குகள் அளித்த வெளிச்சத்தை, எல்.இ.டி., விளக்குகள் குறைவாக அளித்து வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us