/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பருவ மழை துவங்குவதற்குள் ஆற்று பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை பருவ மழை துவங்குவதற்குள் ஆற்று பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பருவ மழை துவங்குவதற்குள் ஆற்று பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பருவ மழை துவங்குவதற்குள் ஆற்று பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பருவ மழை துவங்குவதற்குள் ஆற்று பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : செப் 19, 2025 02:16 AM

காஞ்சிபுரம்,:வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், தாட்டித்தோப்பு வேகவதி ஆற்று உயர்மட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு, முருகன் குடியிருப்பு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த தரைப்பாலம், 2022ல், வடகிழக்கு பருவமழையின்போது ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமானதால், தாட்டித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இரண்டு கி.மீ., சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், மூலதன மானிய திட்டம் 2022- - 23ன்கீழ், 2.29 கோடி ரூபாய் மதிப்பில், கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க, 2023 ஜூலை மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.
பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணுகு சாலை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் மூன்று மாதங்களுக்கு கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் மீதமுள்ள பணியை விரைந்து முடித்து, தாட்டித்தோப்பு வேகவதி ஆற்று உயர்மட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு வேகவதி ஆற்று பாலத்தில், மீதமுள்ள பணிகள் அனைத்தும் மூன்று மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.