Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பழையசீவரம் அணையில் மழை நீரை சேமிப்பதில்... சிக்கல்!:துார்வாராததால் 2,000 ஏக்கர் பாசனம் கேள்விக்குறி

பழையசீவரம் அணையில் மழை நீரை சேமிப்பதில்... சிக்கல்!:துார்வாராததால் 2,000 ஏக்கர் பாசனம் கேள்விக்குறி

பழையசீவரம் அணையில் மழை நீரை சேமிப்பதில்... சிக்கல்!:துார்வாராததால் 2,000 ஏக்கர் பாசனம் கேள்விக்குறி

பழையசீவரம் அணையில் மழை நீரை சேமிப்பதில்... சிக்கல்!:துார்வாராததால் 2,000 ஏக்கர் பாசனம் கேள்விக்குறி

ADDED : செப் 20, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை, நீர்வள ஆதாரத்துறை அகற்றாததால், இரு ஆண்டுகளாக தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், பாலாற்று நீரை நம்பியுள்ள, 2,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் அருகே, பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், பழையசீவரம், புல்லம்பாக்கம், பினாயூர், உள்ளாவூர் போன்ற சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு, விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

அதனால், இப்பகுதி பாலாற்று படுகையை மையமாக கொண்டு தடுப்பணை கட்டி, பாலாற்று பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, 2020ல், பழையசீவரம் - பழவேரி பாலாற்றின் குறுக்கே, 'நபார்டு' திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால், பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஏரியை நம்பியுள்ள, 2,000 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.

பழையசீவரத்தில் தடுப்பணை கட்டியதால், 2021, 2022ம் ஆண்டுகளில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தடுப்பணை நிரம்பியது. கிட்டத்தட்ட 1 டி.எம்.சி., தண்ணீர் தடுப்பணையால் தேங்கி நின்றது. அதேநேரத்தில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வரப்பட்டு, தடுப்பணையின் ஆழமான பள்ளம் மூடப்பட்டு, 6 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து மேடு போல உள்ளது. 2023ம் ஆண்டிலேயே தடுப்பணை முழுதும் மணல் நிரம்பி உள்ளது.

இதனால், பருவமழை காலம் மட்டுமின்றி, கோடை மழை, தென்மேற்கு பருவமழை போன்ற மழை நேரங்களிலும், அணை விரைவாக நிரம்பி விடுகிறது. 6 அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயர ஆழம் கூட இல்லாமல் மணல் மூடி உள்ளதால், ஓரளவு மழை பெய்தாலே தடுப்பணை நிரம்பி விடும் போல உள்ளது.

இதனால், இப்பகுதியில் தடுப்பணை இருந்தும், பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பின்றி, விவசாயத்திற்கு பயன் அளிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை அகற்ற, விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக, நீர்வளத்துறையிடம் கேட்டு வருகின்றனர்.

ஆனால், பிரச்னையின் தீவிரம் உணராத நீர்வளத்துறை, இதற்கான நடவடிக்கை இன்றி இருந்தது. சில மாதங்களுக்கு முன், தடுப்பணை மணலை அகற்ற, 3.3 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளது.

ஆனாலும், இதுவரை மணலை அகற்றுவதற்கான நிதி கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவும், தடுப்பணையில் தண்ணீரை சேமிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்காததால், தடுப்பணையில் குவிந்துள்ள மணலால், தடுப்பணை கட்டியும் பலனளிக்காத சூழல் உள்ளது.

தடுப்பணையில் சேர்ந்துள்ள மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நீர்வள ஆதார துறையிலேயே, கனிமம் மற்றும் கண்காணிப்பு என்ற பிரிவு உள்ளது.

அங்கு கோப்புகள் உள்ளன. அவர்கள் இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். விரைவாக நிதி ஒதுக்கீடு செய்வர். தடுப்பணை மணலை விரைவாக அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us