/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திறந்த கையோடு சுகாதார நிலையத்திற்கு பூட்டு குண்டுபெரும்பேடு நோயாளிகள் அவதி திறந்த கையோடு சுகாதார நிலையத்திற்கு பூட்டு குண்டுபெரும்பேடு நோயாளிகள் அவதி
திறந்த கையோடு சுகாதார நிலையத்திற்கு பூட்டு குண்டுபெரும்பேடு நோயாளிகள் அவதி
திறந்த கையோடு சுகாதார நிலையத்திற்கு பூட்டு குண்டுபெரும்பேடு நோயாளிகள் அவதி
திறந்த கையோடு சுகாதார நிலையத்திற்கு பூட்டு குண்டுபெரும்பேடு நோயாளிகள் அவதி
ADDED : ஜூன் 20, 2025 02:20 AM

ஸ்ரீபெரும்புதுார்:குண்டுபெரும்பேடில், துணை சுகாதார நிலையம் கடந்த 4ம் தேதி திறப்பு விழா கண்ட நிலையில், பயன்பாட்டிற்கு வராமல் திறந்த கையோடு பூட்டப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள, ஊராட்சி சேவை மையக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையத்தில், இப்பகுதி நோயாளிகள் மருந்து, மாத்திரை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து, 2022 -- 23ம் நிதியாண்டில், 15வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின்கீழ், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
இதை, கடந்த 4ம் தேதி, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சுகாதார நிலையத்தை திறந்த வைத்தார். அதன் பின், துணை சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதரா நிலையத்தில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மேலும், மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
எனவே, துணை சுகாதார நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார மருத்துவ அலுவலர் டேவீஸ் பிரவின் ராஜ்குமார் கூறியதாவது:
துணை சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி, மின் வசதி ஏற்படுத்தபடாமல் உள்ளது. புதிய மீட்டர் வேண்டி, மின் வாரியத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
மீட்டர் பொருத்தப்பட்டவுடன், துணை சுதாதார நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.