Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்...பதவி தப்புமா?:29ம் தேதி ஓட்டெடுப்பு என கமிஷனர் அறிவிப்பு

காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்...பதவி தப்புமா?:29ம் தேதி ஓட்டெடுப்பு என கமிஷனர் அறிவிப்பு

காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்...பதவி தப்புமா?:29ம் தேதி ஓட்டெடுப்பு என கமிஷனர் அறிவிப்பு

காஞ்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்...பதவி தப்புமா?:29ம் தேதி ஓட்டெடுப்பு என கமிஷனர் அறிவிப்பு

ADDED : ஜூலை 10, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:கவுன்சிலர்களிடையே எழுந்த பல்வேறு பிரச்னைகள் காரணமாக, தி.மு.க., உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இம்மாதம் 29ம் தேதி, மேயர் பதவி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் ஓட்டெடுப்பு நடைபெறும் என, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 51 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலரான மகாலட்சுமியும், துணைமேயராக காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேயராக பதவி ஏற்ற பின், ஓராண்டு மட்டுமே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே சுமூகமான போக்கு நிலவியது. அடுத்து வந்த மாதங்களில், தி.மு.க., கவுன்சிலர்களுக்குள்ளேயே தனித்தனி அணிகளாக பிரிந்தனர்.

மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே, ஒப்பந்த விவகாரங்களும், அதிகார போட்டியும் தலை துாக்கியது. அதிருப்தி கவுன்சிலர்கள், மேயரின் கணவர் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

இப்பிரச்னைகள் நீடித்த நிலையில், மேயர் மகாலட்சுமி மீது அ.தி.மு.க., மட்டுமல்லாமல், தி.மு.க.,- - காங்., - சுயேட்., என, 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்யத் துவங்கினர்.

இதனால், மாநகராட்சி கூட்டத்தை சரிவர நடத்த முடியாமல் போனது. தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதும், கூட்டத்தை ஒத்தி வைத்து, தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் போனது.

லோக்சபா தேர்தல் முடிந்த பின், மேயர் மகாலட்சுமி மற்றும் கவுன்சிலர்களிடையேயான பிரச்னை சுமூகமாக முடியும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கடந்த மாதம் 7ம் தேதி, கலெக்டர் கலைச்செல்வியிடம், தி.மு.க.,- - அ.தி.மு.க.,- - பா.ம.க.,- - காங்.,- - சுயேட்., என, 33 கவுன்சிலர்கள் மனு அளித்தனர். மனுவில் போதிய காரணங்கள் இல்லை.

அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் என, மூத்த நிர்வாகிகள் பேச்சு நடத்தியும், கவுன்சிலர்கள் சமாதானம் ஆகாமல் உள்ளனர்.

இதற்கிடையே, மாநகராட்சி நிலைக் குழுவின் உறுப்பினர்கள், 14 பேர் கடந்த வாரம் தங்களது நிலைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில், 51 கவுன்சிலர்களில், 17 தி.மு.க., கவுன்சிலர்களும், 7 அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 5 சுயேட்சை, 2 பா.ம.க., ஒரு காங்., மற்றும் ஒரு பா.ஜ., என, 33 பேர் வெளிப்படையாக மேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

மீதமுள்ள 18 கவுன்சிலர்களில், 16 தி.மு.க., கவுன்சிலர்களும், இரு அ.தி.மு.க., கவுன்சிலர்களும், மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்கும் மனுவில் கையெழுத்திடாமல் உள்ளனர்.

மனுவில் கையெழுத்திடாத கவுன்சிலர்களில், 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரவீன்குமார், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மேயருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேயருக்கு ஆதரவு நிலைப்பாட்டில், 13 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். விமலாதேவி மற்றும் சூர்யா ஆகிய இரு தி.மு.க., கவுன்சிலர்களும் மேயருக்கு சாதகமாக முடிவு எடுப்பார்களா என்பதை கணிக்க முடியவில்லை என, கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.

கவுன்சிலர் சூர்யா, மேயருக்கு எதிராக, 2022ல், கட்சித் தலைமையை மீறி மேயர் பதவிக்கு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் கவுன்சிலர்களில், அ.தி.மு.க.,வின் வேலரசு, அகிலா ஆகிய இரு கவுன்சிலர்கள் கையெழுத்திடாமல் உள்ளனர்.

இந்நிலையில், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது மற்றும் மேயரின் பதவி மீதான ஓட்டெடுப்பு நடத்துவதற்கான கூட்டம், வரும் 29ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அண்ணா அரங்கின் முதல் மாடியில், மாநகராட்சி கூட்டரங்களில் நடைபெறும் என, மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேயருக்கு எதிரான கவுன்சிலர்கள்


மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் கவுன்சிலர்கள் 33 பேர் விபரம்
:தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர்: அஸ்மா பேகம், இலக்கியா, பிரியா குழந்தைவேலு, குமரவேல், சசிகலா, மல்லிகா, சர்மிளா, கமலக்கண்ணன், குமரன், சாந்தி, க.சோபனா, பொ.ரமணி, சுதா (எ) சுப்புராயன், சரளா, மோகன், கார்த்திக், சங்கர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 7 பேர்: ஜோதிலட்சுமி, சண்முகநாதன், மெளலி, புனிதா, சிந்தன், சாந்தி, பிரேம்குமார்
சுயேட்சை கவுன்சிலர்கள் 5 பேர்: சாந்தி, ஷாலினி, அன்பழகன், பானுப்பிரியா, கயல்விழிபா.ம.க., கவுன்சிலர்கள் இருவர்: சரஸ்வதி, சூர்யாபா.ஜ., கவுன்சிலர் ஒருவர்: விஜிதாகாங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர்: குமரகுருநாதன் - துணைமேயர்



5ல் 4 பங்கு கவுன்சிலர் தேவை!


மாநகராட்சி விதிகளின்படி, மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு, ஐந்தில் மூன்று பங்கு கவுன்சிலர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி, 51 பேரில், ஐந்தில் மூன்று பங்கு என, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு அளித்ததின் பேரில், கமிஷனர் செந்தில்முருகன் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மேயரின் பதவி மீதான ஓட்டெடுப்பு வரும் 29ம் தேதி நடத்த உள்ளார்.
மேயர் பதவியிலிருந்து மகாலட்சுமியை நீக்க, ஐந்தில், நான்கு பங்கு கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மேயர் மகாலட்சுமியை தவிர்த்து, மொத்தம் 50 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், ஐந்தில், நான்கு பங்கு என, 40 கவுன்சிலர்கள் ஒருமனதாக, ஓட்டெடுப்பில் பங்கேற்று ஓட்டளித்தால் மட்டுமே, தீர்மானம் வெற்றி பெற்று, மேயர் பதவியில் இருந்து மகாலட்சுமியை நீக்க முடியும் என, கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us