ADDED : ஜன 30, 2024 07:58 PM

'மேமி' சப்போட்டா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
என் தோட்டத்தில், மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித மரக்கன்றுகளை நட்டுள்ளேன். வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மர வகைகளை சாகுபடி செய்துள்ளேன்.
அந்த வரிசையில், மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் தாயகமாக விளையும் மேமி சப்போட்டா, நம்மூர் செம்மண் பூமியில் சாகுபடி செய்துள்ளேன்.இது, பிற சப்போட்டா பழங்களை போல, கொத்துக் கொத்தாக மகசூல் கொடுக்காது. அதிக உயர மரமாகவும், ஒரு காம்பில் ஒரு பழம் மட்டுமே காய்க்கும்.
விதை செடியாக சாகுபடி செய்தால், ஏழு ஆண்டுகளுக்கு பின் மகசூல் கொடுக்கும். ஒட்டு செடியாக வாங்கி சாகுபடி செய்தால், மூன்று ஆண்டுகளில் மகசூல் பெற வழி வகுக்கும்.
இந்த மேமி சப்போட்டா பழம் ஓடு கடினமாகவும், இளஞ்சிவப்பு நிறத்தில்பழம் இருக்கும். அதிக சுவையாகவும் இருக்கும். இந்த பழத்தில், அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்து இருப்பதால், சந்தை விற்பனைக்கு பஞ்சம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- எம்.ராஜிவ்காந்தி,
89402 22567.