/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில். சிக்கல்! நிறைவு பெறாத நான்குவழி சாலையால் விபத்து அபாயம்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில். சிக்கல்! நிறைவு பெறாத நான்குவழி சாலையால் விபத்து அபாயம்
சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில். சிக்கல்! நிறைவு பெறாத நான்குவழி சாலையால் விபத்து அபாயம்
சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில். சிக்கல்! நிறைவு பெறாத நான்குவழி சாலையால் விபத்து அபாயம்
சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில். சிக்கல்! நிறைவு பெறாத நான்குவழி சாலையால் விபத்து அபாயம்
ADDED : ஜன 27, 2024 11:42 PM

காஞ்சிபுரம் :வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி இடையே, நிலம் கையகப்படுத்துவதில், ஓராண்டாக தாமதம் ஏற்படுவதால், சாலை விரிவுபடுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. நிறைவு பெறாத நான்குவழி சாலையால், வாகன விபத்துகள் அதிகரிக்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக, 18 கி.மீ., கீழச்சேரி வரை, இருவழி சாலையாக இருந்தது.
இந்த சாலை வழியாக, வாலாஜாபாத் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.
உயிர் சேதம்
இதுதவிர, சுங்குவார்சத்திரம், குன்னம், கட்டவாக்கம், ஊத்துக்காடு, மஞ்சமேடு ஆகிய பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், கனரக வாகனம் மற்றும் பிற வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளன.
இந்த சாலையில், கனரக வாகனங்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால், விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகிறது.
இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, இந்த இருவழி சாலை வழி தடத்தை, நான்குவழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, மத்திய சாலைகள் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், 121.65 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த சாலையில், கட்டவாக்கம் - பூதேரி, சிறுமாங்காடு, தென்னேரி ஆகிய மூன்று இடங்களில், ஓராண்டாக நிலம் கையகப்படுத்தப்படாமல் இருப்பதால், இரு வழி சாலையில் இருந்து, நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நிறைவு பெறவில்லை.
மேலும், நான்குவழி சாலை ஆங்காங்கே நிறைவு பெறாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஒரு சில வாகன ஓட்டிகள் நான்குவழி சாலை தானே என, வேகமாக செல்லும் போது, மீடியன் சுவரில் மோத வேண்டி உள்ளது. இதில், மீடியன் தடுப்பு சுவர், வாகனங்களின் உதிரிபாகம் சேதம், உயிர் சேதம் ஏற்படுகிறது.
உதாரணமாக, கடந்த ஆண்டு குறுகிய சாலை மீடியனில், மூன்று முறை டிப்பர் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சிறுமாங்காடு அருகே வாகன விபத்தில் ஒருவர் இறக்க நேரிட்டுள்ளது.
சாலை போடுவதற்கு எதிர்ப்பு
நேற்று முன்தினம், விரிவுபடுத்தப்படாத சாலையில், டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாயின. இதில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனவே, வாலாஜாபாத் - கீழச்சேரி வரையில், அரைகுறையாக விடப்பட்ட சாலை விரிவாக்க பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர், துரித நடவடிக்கை எடுத்து விரிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே, மூன்று இடங்களில் தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்ததாரர் சாலை போடவில்லை.
அந்த இடங்களில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி முடங்கியுள்ளது. தனி நபர்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி, சாலை போடுவதற்கு துறை ரீதியாக அரசிற்கு புதிதாக பரிந்துரை செய்துள்ளோம். ஒப்புதல் கிடைத்த பின், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.