/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை... குறைப்பு! வீடுதோறும் கணக்கெடுத்து உறுதி செய்ய முடிவுரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை... குறைப்பு! வீடுதோறும் கணக்கெடுத்து உறுதி செய்ய முடிவு
ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை... குறைப்பு! வீடுதோறும் கணக்கெடுத்து உறுதி செய்ய முடிவு
ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை... குறைப்பு! வீடுதோறும் கணக்கெடுத்து உறுதி செய்ய முடிவு
ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் சப்ளை... குறைப்பு! வீடுதோறும் கணக்கெடுத்து உறுதி செய்ய முடிவு
ADDED : ஜூன் 01, 2024 04:15 AM
காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 574 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைக்கு, வெறும் 12 கிலோ லிட்டர் மட்டுமே வருவதால், எரிவாயு சிலிண்டர் இல்லாத 52,686 வீடுகளில், எந்த வகையான அடுப்பை பயன்படுத்துகின்றனர் என்ற கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள், அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம்.
ஆன்லைனில் பதிவு
இதில், மண்ணெண்ணெய் சப்ளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ரேஷன் அட்டைதாரர்கள், தங்களுக்கான புதிய சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்வதால், மண்ணெண்ணெய் சப்ளையை மத்திய அரசு குறைக்கிறது.
அந்த வகையில், இந்தாண்டு ஏப்ரல் மாதம், தமிழகம் முழுதுமே மண்ணெண்ணெய் சப்ளை, மிக குறைவான அளவே மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதனால், மண்ணெண்ணெயை நம்பி, சமையல் செய்து வந்த குடும்பத்தினர் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள், எவ்வாறு சமையல் செய்கின்றனர் என்ற விபரங்களை அறிந்து கொள்ள, கள ஆய்வு செய்ய உணவு பொருள் வழங்கல் துறை முடிவு செய்தது.
எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள், உறவினர்களின் சிலிண்டரை பயன்படுத்துகின்றனரா அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்துகின்றனரா அல்லது விறகு அடுப்பு பயன்படுத்துகின்றனரா என்ற விபரங்களை அறிய கணக்கெடுப்பு நடத்தி, ஆன்லைனில் பதிவு செய்ய உணவு வழங்கல் துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், இதற்கான கணக்கெடுப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்களிலும், 3.99 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இதில், உணவு பொருள் வழங்கல் துறை விபரப்படி, 52,686 ரேஷன் அட்டைதாரர்கள், எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லாமல் உள்ளனர்.
கிராமப்புற பகுதியில் மட்டும், 36,000 அட்டைதாரர்கள் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ரேஷன் கடையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை பயன்படுத்தி, சமையல் செய்கின்றனர்.
52,686 வீடுகள்
மண்ணெண்ணெய் சப்ளை திடீரென குறைந்துவிட்டதால், அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு மாதத்திற்கு 574 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைக்கு, வெறும் 12 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே சப்ளை உள்ளது.
எனவே, சிலிண்டர் இணைப்பு இல்லாத 52,686 வீடுகளுக்கு, சத்துணவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் என, ஆறு வகையான அரசு ஊழியர்கள் நேரடியாக செல்வர்.
அதன்பின் விறகு அடுப்பு, பம்பு ஸ்டவ், மின்சார அடுப்பு, மினி கேஸ் அடுப்பு ஆகியவற்றில், எதை வைத்து சமையல் செய்கின்றனர் எனக் கணக்கெடுத்து விபரங்களை சேகரிக்கின்றனர்.
இதன் மூலம், எரிவாயு சிலிண்டர் இல்லாமல் சிரமப்படும் ரேஷன் அட்டைதாரர்கள் யார் என்பதை கண்டறிவதோடு, அவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதை உறுதி செய்ய முடியும் என, உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பணிகள் துவக்கம்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது:
ஆறு வகையான அரசு ஊழியர்கள், இந்த ஆய்வு பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், எரிவாயு சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்பத்தினரை அடையாளம் காண முடியும். மண்ணெண்ணெய் சப்ளை குறைந்துள்ள நிலையில், உண்மையான பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்க ஏதுவாக இருக்கும்.
முதலில் கிராமப்புற பகுதிகளில் இந்த ஆய்வு பணிகளை துவக்கியுள்ளோம். ஒரு வாரத்திற்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.
ஆய்வில் கிடைத்த தகவல்களை, இணையதளத்தில் பதிவிட கூறியுள்ளோம். கிராமப்புற ஆய்வு முடித்த பின், நகர்ப்புறத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளில் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.