Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சியில் வீடு வழங்கும் திட்டத்தில்...குழப்பம்!Lகணக்கெடுத்தது 17,653; ஒதுக்கீடு 3,000 மட்டுமே

காஞ்சியில் வீடு வழங்கும் திட்டத்தில்...குழப்பம்!Lகணக்கெடுத்தது 17,653; ஒதுக்கீடு 3,000 மட்டுமே

காஞ்சியில் வீடு வழங்கும் திட்டத்தில்...குழப்பம்!Lகணக்கெடுத்தது 17,653; ஒதுக்கீடு 3,000 மட்டுமே

காஞ்சியில் வீடு வழங்கும் திட்டத்தில்...குழப்பம்!Lகணக்கெடுத்தது 17,653; ஒதுக்கீடு 3,000 மட்டுமே

ADDED : ஜூன் 19, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,653 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 3,000 பேர்களுக்கு மட்டுமே கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்கள் உள்ளன.


இதில், 2011ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குடிசை வீடு இருக்கும் நபர்களுக்கு, வீடு கட்டுவதற்கு சில பயனாளிகளை தேர்வு செய்தனர். இதில், 'பிரதமர் வீடு வழங்கும் திட்டம்' மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை கட்டியுள்ளனர்.

இதையடுத்து, 'ஆவாஸ் பிளஸ்' திட்டத்தில், 2018ல், வீடு தேவைப்படுவோருக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், பசுமை வீடு வழங்கும் திட்டம் முடக்கப்பட்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, 2021ல், ஊரக வளர்ச்சித் துறையினர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

அதேபோல, 2022ம் ஆண்டு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புதிய குடிசை வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர்.

இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,000 வீடுகள் தேவைப்படும் என, கணக்கெடுப்பு புள்ளி விபரம் தெரிய வந்துள்ளது.

ஊராட்சிகளில், வீடு தேவைப்படுவோரின் விபரம் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் முன் வரையில், தமிழக அரசு யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை.

லோக்சபா தேர்தலுக்கு பின், கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 3,000 பயனாளிகளுக்கு மட்டுமே வீடு கட்டுவதற்கு தேர்வு செய்யும் பணியில், ஊரக வளர்ச்சி துறை முழு மூச்சாக இறங்கி உள்ளது.

இது, 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போல, கண்துடைக்கும் விஷயமாக உள்ளது என, துறை வட்டாரத்தில் புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 3,000 வீடுகள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

முதலில், கூரை வீட்டில் வசிப்பவர்களை பயனாளிகளாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்பின், வசிக்க லாயக்கற்ற நிலையில் இருக்கும் சிமென்ட் ஷீட் வீடுகள் என, தகுதிவாரியாக பயனாளிகள்தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்ச ரூபாய் செலவில், 360 சதுர அடியில் வீடு கட்டிக் கொள்ளலாம். முதற்கட்டமாக, அமரம்பேடு மற்றும் கோவூரில் மாதிரி வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

விரைவில், மாவட்டத்தில் அனைத்து வீடுகளும், அதே மாதிரியான வீடுகள் கட்டிக் கொடுக்க விரிவுபடுத்தப்படும்.

இதில், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியத்தில் மட்டும் கூடுதல் எண்ணிக்கை வீடுகள் ஒதுக்கப்படும்.

கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தேர்வான பயனாளிகளை, ஜூன்- 30ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடு கட்டுவதற்கு தேர்வு செய்த கணக்கெடுப்பு விபரம்


ஒன்றியம் வீடு தேவைப்படுவோர் எண்ணிக்கை
காஞ்சிபுரம் 4,498
குன்றத்துார் 3,748
ஸ்ரீபெரும்புதுார் 3,593
உத்திரமேரூர் 3,063
வாலாஜாபாத் 2,751
மொத்தம் 17,653







      Our Apps Available On




      Dinamalar

      Follow us