Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு காரையில் இடம்...தேர்வு!: அலைச்சலின்றி விரைவாக மருத்துவம் கிடைக்கும் என்பதால் நிம்மதி

காஞ்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு காரையில் இடம்...தேர்வு!: அலைச்சலின்றி விரைவாக மருத்துவம் கிடைக்கும் என்பதால் நிம்மதி

காஞ்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு காரையில் இடம்...தேர்வு!: அலைச்சலின்றி விரைவாக மருத்துவம் கிடைக்கும் என்பதால் நிம்மதி

காஞ்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு காரையில் இடம்...தேர்வு!: அலைச்சலின்றி விரைவாக மருத்துவம் கிடைக்கும் என்பதால் நிம்மதி

ADDED : ஜூலை 15, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரியுடன் கூடிய மருத்துவமனை அமைப்பதற்கு, காரை கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இனி, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அலைச்சலின்றி விரைவாக மருத்துவம் கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும் போது, செங்கல்பட்டு பகுதியில், அரசு மருத்துவ கல்லுாரியுடன்கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது.

இங்கு, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இருந்து, சரி செய்ய முடியாத நோய்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டமாக தனியாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு, மருத்துவ கல்லுாரியுடன்கூடிய, அரசு மருத்துவமனை இருக்க வேண்டும் என, மருத்துவ துறையின் கட்டமைப்பாகும்.

செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிந்து, ஐந்து ஆண்டுகள் ஆகியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரியுடன்கூடிய மருத்துவமனை துவக்கப்படும் என, அறிவிப்பு வெளியாகவில்லை.

சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரியுடன்கூடிய, அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்யும் பணியை, உடனடியாக துவக்கி உள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், காரை கிராமத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், மருத்துவ கல்லுாரியுடன்கூடிய, அரசு மருத்துவமனைக்கு இடம் தேர்வாகி உள்ளன.

தேர்வு செய்யப்பட்ட இடத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சமீபத்தில் ஆய்வு செய்து, பார்வையிட்டு சென்றுள்ளார்.

அவரை, காரை ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் வரவேற்றார். வருவாய் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.

புதிய நம்பிக்கை


காரை பகுதியில் மருத்துவ கல்லுாரியுடன்கூடிய அரசு மருத்துவமனை வரவிருப்பதால், காரை கிராமத்தை சுற்றியுள்ள சிறுவாக்கம், பரந்துார், கொட்டவாக்கம், சிறுவள்ளூர், படுநெல்லி, கம்மவார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற நோயாளிகள் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் வாகன விபத்தில் சிக்குவோருக்கு, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்க தேவை இருக்காது என, புதிய நம்பிக்கை பிறந்து உள்ளது.

இதுகுறித்து, காரை கிராமவாசிகள் கூறியதாவது:

கிராமப்புறங்களில் இருந்து, பிரசவம் பார்ப்பதற்கு கர்ப்பிணியரை, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்து, அந்த கர்ப்பிணி, மருத்துவ கல்லுாரியுடன்கூடிய மருத்துவமனைக்கு, பிரசவத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறார். இதேபோல, வாகன விபத்து மற்றும் பிற சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

காரை பகுதியில் மருத்துவ கல்லுாரியுடன்கூடிய அரசு மருத்துவமனை வந்தால், இனி மேல், நோயாளிகளை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

துறை ரீதியான ஒப்புதல்


இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காரை கிராமத்தில், புல எண்கள்: -616 மற்றும் 617 ஆகியவற்றில் இருந்து, 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 2020ல், மருத்துவ கல்லுாரி பெயருக்கு பட்டா மாற்றமும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

துறை ரீதியான ஒப்புதல் கிடைத்த பின் மருத்துவ கல்லுாரி கட்டுமானப் பணிகள் துவக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிராமங்கள் பயன் பெறும்


சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஒட்டியவாறு, காரை கிராமம் உள்ளது. இங்கு, ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. காரப்பேட்டை அறிஞர் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லுாரி மற்றும் காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை என, உலகத் தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. தற்போது, மருத்துவ கல்லுாரியுடன்கூடிய மருத்துவமனை வந்தால், காரை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us