/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வெள்ளக்குளத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல்...அலட்சியம்;தொடரும் மின் தடையால் காஞ்சி நகர மக்கள் தவிப்புவெள்ளக்குளத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல்...அலட்சியம்;தொடரும் மின் தடையால் காஞ்சி நகர மக்கள் தவிப்பு
வெள்ளக்குளத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல்...அலட்சியம்;தொடரும் மின் தடையால் காஞ்சி நகர மக்கள் தவிப்பு
வெள்ளக்குளத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல்...அலட்சியம்;தொடரும் மின் தடையால் காஞ்சி நகர மக்கள் தவிப்பு
வெள்ளக்குளத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல்...அலட்சியம்;தொடரும் மின் தடையால் காஞ்சி நகர மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 09, 2025 02:52 AM
காஞ்சிபுரம்:வெள்ளக்குளம் துணை மின் நிலையத்தில், பழுதான மின் மாற்றியை மாற்றியமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், காஞ்சிபுரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின் வாரிய கோட்ட அலுவலங்களின் கீழ், 41 துணை மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடியிருப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் என, மொத்தம் 1.50 லட்சம் மின் இணைப்புகளுக்கு, பஞ்சுப்பேட்டை, ஓரிக்கை, பிள்ளையார்பாளையம், வெள்ளக்குளம், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு, வையாவூர் ஆகிய பிரதான துணை மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப, 8 மெகா வோல்ட் ஆம்பியர் முதல் 25 மெகா வோல்ட் ஆம்பியர் வரையிலான மின் மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அடிக்கடி மின் தடை
ஒரு துணை மின் நிலையத்தில், மின் மாற்றி பழுது ஏற்பட்டால், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு, அவசர கால கட்டத்தில் வேறு ஒரு துணை மின் நிலையத்தில் இருந்து, மின் சப்ளையை மாற்றி விடப்படும்.
இதன் வாயிலாக, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றன.
வெள்ளக்குளம் துணை மின் நிலையத்தில், 8 மெகா வோல்ட் ஆம்பியர் இரண்டு மின் மாற்றிகளின் வாயிலாக வெள்ளக்குளம், பெரியார் நகர், அய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
இங்கு, 8 மெகா வோல்ட் ஆம்பியர் மின் திறனுடைய மின் மாற்றி, ஒரு வாரமாக பழுது ஏற்பட்டுள்ளது. பழுது சரி செய்யும் வகையில், ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இருந்து, மின் சப்ளை மாற்றி விடப்பட்டுள்ளது.
இந்த மின் வழித் தடத்தின் வாயிலாக செல்லும் மின்சாரம் அதிக திறனுடன் செல்வதால், 11 கிலோ வோல்ட் மற்றும் 33 கிலோ வோல்ட் மின் மாற்றிகளில் அடிக்கடி பியூஸ் போய் விடுகிறது. ஒரு சில மின் மாற்றிகளில் மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு விடுகிறது.
இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் நுகர்வோரின் புகார்களுக்கு மின் வாரிய அதிகாரிகள் இன்னும் சிறிது நேரத்தில் மின் சப்ளை சரி செய்யப்படும் என, ஒரே பதில் மட்டுமே வைத்துள்ளனர்.
இருப்பினும், மின் தடை சரி செய்வதற்கு நான்கு மணி நேரம் வரையில் கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர் என, பெரியார் நகர் பகுதியினர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொசு தொல்லை
இதுகுறித்து, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரை சுற்றியுள்ள பல்வேறு நகர் குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
இரவு நேரத்தில் மின் தடை சரி செய்வதற்கு நான்கு மணி நேரமாகி விடுகிறது. கொசு தொல்லையால் இரவு துாக்கத்தை தொலைக்க வேண்டி உள்ளது.
தற்போது, காலை, இரவு நேரங்களில் அடிக்கடி துாறல் போடுவதால், வெப்பக் காற்றால் புழுக்கம் தாங்க முடியாமல் உள்ளது. மேலும், சில நேரங்களில் சுவாசிக்க முடியாத நிலையும் உருவாகிறது.
இதை தவிர்க்க தடையின்றி மின்சாரத்தை வழங்க சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெள்ளக்குளம் துணை மின் நிலையத்தில், எட்டு மெகா வோல்ட் ஆம்பியர் திறன் மின் மாற்றி பழுதால், ஆங்காங்கே மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிய மின் மாற்றி வந்த பின், குடியிருப்புகளுக்கு சீரான மின்சாரம் வினியோகிக்கப்படும்.
அதுவரையில், மின் தேவையை கருத்தில் கொண்டு ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இருந்து சப்ளை மாற்றி விட்டுள்ளோம். விரைவில் மின் தட்டுப்பாடு சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.