ADDED : ஜூன் 22, 2025 01:54 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் கல்வி நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில், சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடந்தது.
காஞ்சிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவுத்திருக்கோவில் சார்பில் சர்வதேச யோகா தின விழா காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
சென்னை, மயிலாப்பூர் முதுநிலை பேராசிரியர் பி.சேகர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில், கல்லுாரி மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் முத்திரைகள் என பல்வேறு யோகாசனம் செய்தனர்.
நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் இளங்கோவன் வரவேற்றார். செயலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
காஞ்சிபுரம் மஹாமஹரிஷி அறக்கட்டளை, மகாயோகம் சார்பில், யோகா விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி கலெக்டர் அலுவலக மைதானம் வரை நடந்தது.
பேரணியை மகாயோகம், ஜென்ஸ்கர் குணப்படுத்தும் தற்காப்பு கலை சீனியர் மாஸ்டர் வினோத், கொடி அசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலக மைதானத்தில் மகா யோகம் முதன்மை மருத்துவர் தயாநிதி ரிஷி தலைமையில் திரளானோர் பங்கேற்று யோகா பயிற்சியை செய்தனர்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற போலீஸ் டி.எஸ்.பி., ராதாகிருஷ்னன், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர், மகாயோகம் சார்பில் யோகாவில் உலக சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் பள்ளி செல்லா பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வரும் பாரதியார் உண்டு உறைவிட பள்ளியில் நடந்த சர்வதேச யோகா தின விழாவிற்கு உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை தாங்கினார்.
முதுநிலை திட்ட மேலாளர் துாயவன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்கள் வள்ளி, மனிஷா, அனுஸ்ரீ ஷீலா ஆகியோர் யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் யோகாவினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.
இதேபோல, காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், தேசிய யோகா தினத்தை முன்னிட்டு, பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் முன்னிலை வகித்தார். இதில், பிரம்ம குமாரிகள் இயக்க நிர்வாகி காந்திமதி மற்றும் பலர் பங்கேற்றனர்.