Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எல்.இ.டி., விளக்குகள் மாற்றியதில் மோசடி...நுாதனம்!:காஞ்சிபுரம் கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

 எல்.இ.டி., விளக்குகள் மாற்றியதில் மோசடி...நுாதனம்!:காஞ்சிபுரம் கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

 எல்.இ.டி., விளக்குகள் மாற்றியதில் மோசடி...நுாதனம்!:காஞ்சிபுரம் கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

 எல்.இ.டி., விளக்குகள் மாற்றியதில் மோசடி...நுாதனம்!:காஞ்சிபுரம் கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்

ADDED : ஜூன் 15, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், 12 கோடி ரூபாய் மதிப்பில், 12,000 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டதில், ஏராளமான விதிமீறலும், ஊழலும் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம், கவுன்சிலர்கள் புகாராக அளித்துள்ளனர். இப்புகாரின் பின்னணி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளதால், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் புகார் பற்றி தலைமையிடத்துக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி தெருக்களில் பயன்பாட்டில் இருந்த குழல் மின்விளக்குகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், மின் கட்டண செலவை குறைக்க, எல்.இ.டி., விளக்குகளை பொருத்த முடிவு செய்தது.

அதன்படி, தனியார் நிறுவனம் வாயிலாக பணிகள் மேற்கொள்ள, 2023ல், மார்ச் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில், 1, 2 ஆகிய இரு மண்டலங்களுக்கு, 5.76 கோடி ரூபாயிலும், 3, 4 ஆகிய இரு மண்டலங்களுக்கு, 6.7 கோடி ரூபாயிலும் என, 12.4 கோடி ரூபாய் மதிப்பில், 12,000 புதிய எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டன.

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டதில், பெரும் ஊழல் நடந்திருப்பதாக, அ.தி.மு.க.,வின், 41வது வார்டு கவுன்சிலர் சிந்தன் உட்பட மூன்று கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவிடம், கடந்த 11ம் தேதி புகார் அளித்திருந்தார்.

அதில், தெரு விளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டிய காப்பர் ஒயர்களுக்கு பதிலாக, பல இடங்களில் அலுமினியம் ஒயர்களை கொண்டு பயன்படுத்தி உள்ளனர்.

இதனால், பெரும்பாலான தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை எனவும், டெண்டர் தொகையில், 5 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த ஊழல் புகார் பற்றி, துறை மேலிடத்துக்கு அனுப்பிய காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், புகார் குறித்து விசாரிக்கின்றனர்.

எல்.இ.டி., விளக்குகள் பற்றிய ஊழல் புகார் கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த பின்னணி விபரம்:

 ↓தெருக்களின் ஓரம், நெடுஞ்சாலை, முக்கிய இடங்களில் அதிக வாட்ஸ் உடைய விளக்குகளுக்கு பதிலாக, வாட்ஸ் குறைவான பல்புகள், பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன

 ↓மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ள ஜி.ஐ., பைப்புக்கு பதிலாக, சாதாரண துருப்பிடிக்கக்கூடிய பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, பல இடங்களில் இப்போதே துருப்பிடிக்க துவங்கிவிட்டன

 ↓ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட குழல் விளக்கு, அலுமினியம் பைப்புகள் விற்பனை செய்த தொகை, மாநகராட்சி கணக்கில் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது. கழிவு பொருட்களை டெண்டர் விடாமல் அகற்றப்பட்டுள்ளன

 ↓பராமரிக்கப்படாத பல உயர் மின்விளக்கு கோபுரங்களுக்கு, தனியார் நிறுவனத்திற்கு, மாநகராட்சி சார்பில், பராமரிப்பு தொகை இன்று வரை வழங்கப்படுகிறது

 ↓மின் விளக்குகள் செயல்படுகிறதா அல்லது பழுதாகிவிட்டதா என்பதை கணினி வாயிலாக கண்டறிய வேண்டிய சென்சார்கள், ஏராளமான விளக்குகளில் பொருத்தப்படவில்லை

எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்ட விவகாரத்தில், இதுபோன்று பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாகவே, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம், கவுன்சிலர்கள் புகாராக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கேட்டபோது, 'கவுன்சிலர்கள் கொடுத்த புகார் விபரங்கள், தலைமையிடத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

புகார் குறித்து விசாரணை செய்ய அனுமதி வழங்கிய பின் விசாரணை நடைபெறும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us