Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வெள்ள தடுப்பு: 46 கி.மீ., துார் வாரும் பணி துவக்கம்

வெள்ள தடுப்பு: 46 கி.மீ., துார் வாரும் பணி துவக்கம்

வெள்ள தடுப்பு: 46 கி.மீ., துார் வாரும் பணி துவக்கம்

வெள்ள தடுப்பு: 46 கி.மீ., துார் வாரும் பணி துவக்கம்

ADDED : செப் 19, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 46.8 கி.மீ., கால்வாய் துார் வாரும் பணியை நீர்வளத் துறையினர் துவங்கி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன.

இதில், 381 ஏரிகள் நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன. இதுதவிர, செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு என, மூன்று ஆறுகள் உள்ளன.

27 இடங்கள்


தென்மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய இரு பருவ மழைக்கு நிரம்பும் ஏரி உபரி நீர், ஆற்று வெள்ள நீரில், மாவட்டத்தில் இருக்கும் சிற்றேரி, பெரிய ஏரி, தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன.

இந்த நீரை பயன் படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இருப்பினும், ஏரி நீர் வரத்துக் கால்வாய், போக்கு கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள், விவசாய பயன்பாட்டிற்கு நிலங்களாக மாற்றி இருப்பதால், பருவ மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, வேகவதி ஆற்றங்கரையோரம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் மீண்டும் துளிர் விட துவங்கியுள்ளன.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் ஏரியில் இருந்து, உபரி நீர் தென்னேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குறுக்கே, விவசாய பயன்பாட்டிற்கு மடக்கிய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வந்தனர்.

இதேபோல, பல்வேறு இடங்களில் வீடுகள், நிலங்கள் ஆக்கிரமிப்பால், பருவ மழை காலங்களில், வெள்ள தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு வந்தன.

இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை மீட்டு, வெள்ள நீர் எளிதாக வடிந்து செல்லும் வகையில், கால்வாய் துார்வாரப்பட உள்ளன. இதற்கு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில், 27 இடங்கள் தேர்வு செய்துள்ளன. இதில், 46.8 கி.மீ., துாரம் கால்வாய் துார் வாரப்பட உள்ளன.

இதுதவிர, வருவாய் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள், நிலங்கள் என, பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள நீர் தேங்காதவாறு வழி வகை செய்யப்பட்டுள்ளன.

தயார்


இதன் மூலமாக, வட கிழக்கு பருவ மழை காலங்களில், வெள்ள நீரால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வெள்ள பாதிப்பு ஏற்படும் வேகவதி ஆறு, உத்திரமேரூர் ஏரி, கம்பன் கால்வாய், சோமங்கலம் ஏரி, மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்கள், துார் வாரும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, காஞ்சிபுரம் ஏனாத்துார் கால்வாய், உத்திரமேரூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் துவக்கியுள்ளோம். விரைவில், அனைத்து இடங்களிலும் துார்வாரி வட கிழக்கு பருவ மழைக்கு முன்பு தயார் படுத்தி விடுவோம்.

மேலும், பருவ மழை நேரத்தில் இடையூறு ஏற்படும் பகுதிகளிலும் துார் வாருவதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருங்கிணைப்பு தேவை
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஏரி நிரம்பினால், உபரி நீர் கால்வாய், குதிரைக்கால் மடுவு வழியாக தென்னேரி ஏரிக்கு சென்று தண்ணீர் நிரம்பும். இந்த கால்வாய் குறுக்கே, பல ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். காஞ்சிபுரம் சப்-கலெக்டர் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றி துார்வாரப்படுகிறது. இதேபோல், வெவ்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் வருவாய் துறையினர் ஒருங்கிணைப்பு இருந்தால், நீர் வளத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சவுகரியமாக இருக்கும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us