Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாரம்பரிய வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து... அட்டூழியம்

பாரம்பரிய வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து... அட்டூழியம்

பாரம்பரிய வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து... அட்டூழியம்

பாரம்பரிய வழிப்போக்கர் மண்டபத்தை இடித்து... அட்டூழியம்

ADDED : ஜூன் 01, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வழிப்போக்கர் மண்டப இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், தனியார் ஒருவர் இடித்து தள்ளிய அட்டூழியம் நடந்துள்ளது. வழிப்போக்கர் மண்டங்கள் உட்பட, பழமையான சின்னங்கள் அழிந்து வருவதாக காஞ்சி நகரத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவம், வைணவம், சமணம், புத்த மதங்களுக்கான கோவில்களும், அடையாள சின்னங்களும், சிலைகளும் ஏராளமாக உள்ளன. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

வழிப்போக்கர்கள் தங்கி செல்ல வசதியாக, மன்னர்களால் ஹிந்து கோவில் சின்னங்கள் கொண்ட மண்டபங்கள் ஆங்காங்கே உள்ளன. காஞ்சி நகரம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் வழிப்போக்கர் மண்டபங்கள் இன்னும் உள்ளன.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபங்கள் இன்றைக்கு கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து போகின்றன.

காஞ்சிபுரம் நகரில், சுவாமி வீதியுலாவின்போது, தரிசனத்திற்காக ஏற்படுத்தப்பட்ட பல மண்டபங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி, வணிக ரீதியில் இயங்குகின்றன.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியிலும், நெல்லுக்கார வீதியிலும், விளக்கடி கோவில் தெரு முனை என பல இடங்களில் உள்ள மண்டபங்களை, ஹிந்து சமய அறநிலையத் துறை வாடகை விட்டுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஜெம் நகரில், தனி நபருக்கு சொந்தமான இடத்திற்கு அருகே, ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரிய வழிப்போக்கர் மண்டபத்தை, தனி நபர் ஒருவர் பொக்லைன் இயந்தித்தை பயன்படுத்தி, நேற்று முன்தினம் இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், மண்டபத்தை இடித்தவர்களிடமும் வாக்குவாதம் செய்தனர்.

இடத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, மண்டபத்தை இடித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில், மண்டபம் இடித்தவர் மீது வருவாய் துறையும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள் புகார் கூறுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் அண்ணா அரங்கம் அருகே கவிதை விநாயகர் கோவில் முகப்பில் உள்ள மண்டபத்தில் கடைகள் சூழ்ந்து, கோவில் இருப்பதே தெரியாத நிலை உள்ளது.

அதேபோல, கீரைமண்டபம் அருகே பணாமுடீஸ்வரர் கோவில் அருகே உள்ள மண்டபத்தை இரு ஆண்டுகளுக்கு முன்பாக சிலர் ஆக்கிரமித்தனர். அதையும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வழியின்றி ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.

வாலாஜாபாத் செல்லும் வழியில் தாங்கி கிராமம் அருகே உள்ள வழிப்போக்கர் மண்டபத்தை, தமிழக தொல்லியல் துறை வேலி அமைத்து, தகவல் பலகை அமைத்து, பாதுகாத்து வருகிறது.

தொல்லியல் துறை அதிகாரிகள், பழமையான மண்டபங்களை பாதுகாக்க தவறுவதால், தனிநபர்களால் மண்டபங்கள் பல இடிக்கப்பட்டு, அந்த இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது.

தொல்லியல் துறை, உள்ளாட்சி நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆகிய துறைகள் இணைந்து, மண்டபங்களை சீரமைத்து, வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

விசாரணை நடக்கிறது

'மண்டபத்தை இடித்த விபரம் தெரியவந்தது. தாசில்தாரை அனுப்பி விசாரிக்க சொல்லி உள்ளேன். அவர் விசாரித்து வருகிறார். அறிக்கை வந்தவுடன் மற்ற விபரங்களை தெரிவிக்கிறேன்.

- ஆஷிக் அலி,

சப்- கலெக்டர், காஞ்சிபுரம்.

கலாசார சின்னம்

காஞ்சிபுரத்தில் இருந்து, வந்தவாசி வழியாக, திருச்சி செல்லும் வழியில் பல வழிப்போக்கர் மண்டபங்கள் உள்ளன. மண்டபம், அதை சுற்றிய இடம் எல்லாம் அரசு புறம்போக்கு இடம்தான். அருகே குளமும், சுமை தாங்கியும் இருக்கும்.

அந்த காலத்தில் இரவில் தங்க இந்த மண்டபங்கள் கட்டப்பட்டன. இவை, தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டு சின்னங்கள். இவற்றை சமூக விரோத கும்பல் அழித்து வருகிறது.

ஏற்கனவே செவிலிமேட்டில் இருந்த மண்டபமும் காணாமல் போய்விட்டது. தற்போது, மற்றொரு மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது. அரசு தடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

- ஜெகன்,

மாவட்ட தலைவர், காஞ்சிபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us