/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதில் இழுபறி இடையூறாக பொதுப்பணி துறை அலுவலகம்புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதில் இழுபறி இடையூறாக பொதுப்பணி துறை அலுவலகம்
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதில் இழுபறி இடையூறாக பொதுப்பணி துறை அலுவலகம்
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதில் இழுபறி இடையூறாக பொதுப்பணி துறை அலுவலகம்
புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதில் இழுபறி இடையூறாக பொதுப்பணி துறை அலுவலகம்
ADDED : பிப் 23, 2024 10:58 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு, புதிதாக கட்டடம் கட்ட பொதுப்பணித் துறை அலுவலகம் இடையூறாக உள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும், ஒரகடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஓராண்டு ஆகியும் அறிவிப்பு காற்றில் பறக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய நான்கு இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம், காமராஜர் சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையத்துடன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகமும் இயங்கி வருகிறது.
இடவசதியில்லை
தற்போது, தீயணைப்பு நிலையம் செயல்படும் இடத்தை, ஆங்கிலேயர் ஆட்சியின்போது குதிரை லாயமாக பயன்படுத்தி வந்தனர். அப்போது, போக்குவரத்திற்காக குதிரைகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
குதிரைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க தனியார் ஆட்களையும் நியமித்திருந்தனர். அவ்வாறு, குதிரைகளை கட்டவும், பராமரிக்கவும், தாலுகா அலுவலக வளாகத்தில் குதிரை லாயம் செயல்பட்டு வந்தது.
குதிரை லாயம் செயல்பட்டு வந்த இடத்தில், 1942ல் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம் அங்கேயேபோதிய இடவசதியின்றி செயல்பட்டு வருகிறது.
இங்கு தீயணைப்பு நிலையத்துடன், மாவட்ட தீயணைப்பு அலுவலர், கூடுதல் மாவட்ட தீயணைப்பு அலுவலர், நிலைய அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறைகளும் இடவசதியின்றி உள்ளது.
மேலும், தீயணைப்பு ஊழியர்களுக்கான ஓய்வறை, பொருட்கள் பாதுகாப்பு அறை என, பிற வசதிகளும் இன்றி உள்ளது. குதிரை லாயத்திலேயே, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதே இடத்தில் போதிய வசதிகளுடன், தீயணைப்பு அலுவலகத்துடன் கூடிய தீயணைப்பு நிலையம் கட்ட, ஓராண்டிற்கு முன் தமிழக அரசு, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
ஆனால், இட பிரச்னை காரணமாக, இப்போது வரை தீயணைப்பு நிலையம் கட்ட முடியாத நிலையே நீடிக்கிறது.
அதிகாரிகள் புலம்பல்
தீயணைப்பு அலுவலகம் அருகே இயங்கும் பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளர் அலுவலகமும், தீயணைப்பு அலுவலகமும் அருகருகே அமைந்திருப்பதால், ஒரே கட்டடமாக கட்டுவதில் சில சிக்கல் எழுந்துள்ளது.
இதனால், பொதுப்பணித் துறைக்கு அதே வளாகத்தில் வேறு இடம் வழங்க வருவாய் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான, கோப்புகள் வருவாய் துறை கமிஷனர் அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகங்களில் நிலுவையில் இருப்பதால், நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகளை துவக்க முடியாமல், தீயணைப்பு துறை அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி கூறியதாவது:
தாலுகா அலுவலக வளாகம் முழுதும் வருவாய் துறைக்கு சொந்தமானது. இந்த வளாகத்தில் உள்ள பிற துறை அலுவலகங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியுமே தவிர, அந்த அலுவலகங்களுக்கு பட்டா வழங்க முடியாது.
தீயணைப்பு அலுவலகமும், தீயணைப்பு நிலையம், பொதுப்பணித் துறை அலுவலகம் ஆகியவை மாறி மாறி அருகருகே வருவதால், ஒரே இடத்தில் ஒரே கட்டமாக, 6 சென்டில் இடம் தேவைப்படுகிறது.
எனவே, ஒரே இடமாக வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக, வருவாய் துறை கமிஷனர் அலுவலகத்திற்கு கோப்புகள் அனுப்பியுள்ளோம்; விரைவில் அனுமதி கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
இட பிரச்னை சம்பந்தமாக பொதுப்பணித் துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை உயரதிகாரிகள் வந்து பார்த்து சென்றுவிட்டனர். எங்கள் துறைக்கு நாங்கள் கோப்புகள் அனுப்பி விட்டோம்.
எங்களுக்கு வேறு இடம் தருவதாக சொல்லி இருக்கின்றனர். மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பதற்கு தேவையான இட வசதியுடன் இடம் வழங்க வேண்டும் என, நாங்கள் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் சில நாட்களில் வருவாய் துறை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்துவிடும். அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை நாங்கள் துவங்கி விடுவோம்.
தீயணைப்பு துறை அதிகாரி,
காஞ்சிபுரம்.