/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்
புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்
புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்
புறவழிச்சாலை பணிக்கு குடியிருப்புகளால் சிக்கல் !: 20 கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவலம்
ADDED : ஜூன் 08, 2024 11:31 PM

காஞ்சிபுரம்: தக்கோலம் - தணிகைபோளூர் புறவழிச்சாலை அமைக்கும் பணியில் குறுக்கிடும் குடியிருப்புகளால், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இது, 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில், வாலாஜாபாத் புறவழிச் சாலையில், உயர்மட்ட பாலங்களின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, நடந்து வருகின்றன.
அதேபோல, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், காஞ்சிபுரம் முதல், பரமேஸ்வரமங்கலம் வரையில், 22 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கூட்டுச் சாலையில் இருந்து, அரக்கோணம் புறவழியில், பை - பாஸ் என, அழைக்கப்படும் புறவழிச் சாலை தணிகைபோளூர் வரையில் அமைய உள்ளது.
இந்த, 17 கி.மீ., துாரம் சாலையில், 41 இடங்களில் சிறிய அளவிலான தரைப்பாலங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த சாலை பணி நிறைவு பெற்றால், செங்கல்பட்டு, பாலுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், பள்ளூர், சேந்தமங்கலம், மஞ்சம்பாடி, தக்கோலம், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அரக்கோணம் வழியாக, திருத்தணி செல்வோர் புறவழிச் சாலையில் எளிதாக கடந்து செல்ல முடியும்.
இதில், தக்கோலம் ரயில் கடவுப்பாதை மற்றும் மேல்பாக்கம் கிராமத்தில், கான்கிரீட் குடியிருப்புகள் குறுக்கிடுகின்றன. இதனால், புறவழிச் சாலை அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, மேல்பாக்கம் பகுதிவாசிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, குடியிருப்பு கட்டிக் கொடுத்த பிறகே, அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கப்படும்.
நடப்பாண்டு டிசம்பர் மாதம் முடிக்க வேண்டி புறவழிச் சாலை போடும் பணிகள், குறைந்தது ஆறு மாதங்கள் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும் என, சாலை விரிவாக்க அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதுவரையில், திருத்தணியில் இருந்து, தணிகைபோளூர் புறவழிச் சாலை வழியாக செல்லும் வாகனங்கள், கைனுார், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தக்கோலம்- - தணிகைபோளூர் வழியாக செல்லும் புறவழிச் சாலை போடும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புறவழிச் சாலை போடும் பணிக்கு, டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்திற்குள், பணிகளை முடிக்க முடியாதது உண்மை தான்.
இருப்பினும், கான்கிரீட் வீட்டில் இருப்பவர்கள் மறு குடியமர்வுக்குபின், மேம்பாலம் அமைக்கும் பணி துவக்க உள்ளது. இதற்கு, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். எனினும், விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.