Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பறவைகள் சரணாலய நடவடிக்கை... தாமதம்: நாசமாகி வரும் நத்தப்பேட்டை ஏரி

பறவைகள் சரணாலய நடவடிக்கை... தாமதம்: நாசமாகி வரும் நத்தப்பேட்டை ஏரி

பறவைகள் சரணாலய நடவடிக்கை... தாமதம்: நாசமாகி வரும் நத்தப்பேட்டை ஏரி

பறவைகள் சரணாலய நடவடிக்கை... தாமதம்: நாசமாகி வரும் நத்தப்பேட்டை ஏரி

ADDED : ஜூலை 02, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:பறவைகள் சரணாலயமாக மாற்றக்கோரும் காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க, அரசிடம் 28 கோடி ரூபாய் கேட்டு நீர்வளத்துறை காத்திருக்கிறது. நிதி கிடைக்காததால், கழிவுநீர் கலப்பதோடு, ஏரி நாசமாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை பகுதியில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் நத்தப்பேட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக, 550 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டு முழுதும் இந்த ஏரியில் தண்ணீர் இருப்பதால், இங்கு வளரும் மீன்களை பிடித்து மீனவர்கள் பலரும் விற்பனை செய்து பிழைக்கின்றனர்.

வேடந்தாங்கல் போல், கூழைக்கடா, வெள்ளை சிறிய நாரை உள்ளிட்ட பல பறவைகள் இங்கு ஆண்டு முழுதும் முகாமிடுவதால், பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுதொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில், நீர்வளத்துறைக்கு பறவைகள் சரணாலயம் அமைப்பது மற்றும் ஏரி சீரமைப்பு பற்றி பல்வேறு கேள்விகளை தீர்ப்பாயம் கடந்த ஆண்டுகளில் எழுப்பி இருந்தது.

ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுதும், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரியில் கலக்கிறது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி பல ஆண்டுகள் ஆனதால், மாநகராட்சியில் சேகரமாகும் கழிவுநீர் முழுதும் ரசாயணங்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் நேரடியாக ஏரியில் கலக்கிறது.

இதுமட்டுமல்லாமல், மஞ்சள்நீர்க்கால்வாய் வாயிலாகவும் ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. ஏரியின் ஒரு பகுதியில், மாநகராட்சி குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏரியின் நில அமைப்பே மாறிவிட்டது.

விவசாயிகள் இதுபற்றி பலமுறை கலெக்டரிடமும், மாநகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத்துறை ஆகியோரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளும், சுற்றியுள்ள வையாவூர், களியனுார் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாவதாக பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புலம்பியும் பலன் இல்லை.

இந்நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. நத்தப்பேட்டை ஏரியை சுத்தம் செய்ய தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறைக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இதன் அடிப்படையில், நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க 28 கோடி ரூபாய் தேவை என, மதிப்பீடு செய்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை, தமிழக அரசுக்கு கடந்தாண்டு கருத்துரு அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்கவும், கால்வாய்களை மீட்டெடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு கிடைப்பதில்லை என அதிகாரிகள் புலம்பி வரும் நிலையில், நத்தப்பேட்டை ஏரியை சீரமைக்க, 28 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே சீரமைக்க முடியும்.

தமிழக அரசு நிதி வழங்காததால், ஏரியை சீரமைக்க முடியாமல், அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. ஏரியின் கரை, கலங்கல், மதகு போன்றவை பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது.

நிதி ஒதுக்கீடு செய்தால், 'ஏரி முழுதும் துார் வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, கலங்கள், மதகு போன்றவை டெண்டர் விட்டு சரிசெய்யப்படும்' என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையம்


நத்தப்பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுதாகி, ஏரியில் மாநகராட்சி கழிவுநீர் நேரடியாக கலக்கிது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மறு கட்டமைப்பு செய்ய 68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக அமைந்தவுடன், நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us