Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

ADDED : செப் 20, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் முன் வர வேண்டும் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.

எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனத்தின் வேளாண் தொழில்நுட்ப வல்லுனர் முருகானந்தம், மக்காச்சோளம் சாகுபடி, விற்பனை குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.



காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராம விவசாயிகளுக்கு மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட விதைகள், கூட்டுறவு சங்க கடன் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

சாரங்கன், கோவிந்தவாடி

கூட்டுறவு வேளாண் சங்கத்தில், யூரியா தட்டுப்பாடு, கடன் பெறுவோருக்கு பேப்பர் செலவு ஆகியவை வசூலிக்கின்றனர்.

ஜெயஸ்ரீ, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர்

கூட்டுறவு வேளாண் சங்கத்தில் வழங்கி ரசீது வழங்குங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சாரங்கன், கோவிந்தவாடி

வேளியூர் எரி சீரமைப்பு, கோவிந்தவாடி ஏரிக்கும் வரும் நீர்வரத்துக் கால்வாய் குறுக்கே, ராணிப்பேட்டை மாவட்ட நீர்வளத் துறையினர் தடுப்பணை கட்டியுள்ளனர். இதனால், மழைக்காலத்தில் கோவிந்தவாடி ஏரிக்கு நீர் வரத்து சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

மார்கண்டன்,

செயற்பொறியாளர், நீர்வளத்துறை

வேளியூர் ஏரி சீரமைக்க நிதி கேட்டுள்ளோம். தடுப்பணை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செந்தில்குமார், கோவிந்தவாடி

கம்மவார்பாளையம் கிராமத்தில், தனியார் வீட்டுமனைப் பிரிவு நிறுவனம் வீட்டுமனை போட்டுள்ளது. இதில், பாசன கால்வாய், வடி நீர் கால்வாய் துார்த்து விட்டனர். சமீபத்தில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரில் தண்ணீர் வடிவதற்கு வசதி இன்றி நீரில் மூழ்கி உள்ளது.

கலைச்செல்வி, கலெக்டர்

டி.டி.சி.,பி., மற்றும் நீர்வளத் துறையினர் ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறும் வகையில் வழி வகை செய்யுங்கள்.

அசோகன், விவசாயி

கீழ்பெரமநல்லுார் நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு லாரிகள் செல்வதற்கு ஏற்ப கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும்.

கலைச்செல்வி, கலெக்டர்

சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரைக்கப்படும்.

மாசிலாமணி, விவசாயி

காட்டுப்பன்றிகள் அதிகரிப்புக்கு காரணம் விலங்குகளில் உணவு சங்கிலி துண்டிப்பு காரணமே பெரியதாக உள்ளது. குறிப்பாக, வயலில் இருக்கும் நண்டுகளை வேட்டையாட, குள்ள நரிகளின் நடமாட்டம் குறைந்ததால், காட்டுப்பன்றிகள் அதிகரித்துள்ளன.

விவசாயிகள், புல்லை கட்டுப்படுத்த களைக்கொல்லி பயன்படுத்தியதால், வயலில் நண்டுகள் இறந்தன. குள்ள நரிகளுக்கு தீவனம் பற்றாக்குறையால், அவை இடம் பெயர்ந்துவிட்டன.

இதனால், காட்டுப்பன்றிகள் வயலை நாசப்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி மீனா, வன அலுவலர்

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சிகள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. பன்றிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அடையாளப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணன்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

தென்னேரி ஏரி மதகு ஷட்டர் சரியாக சீரமைக்கவில்லை. மேலும், சில ஷட்டர்கள் அமைக்க வேண்டும்.

மார்கண்டன், நீர்வளத்துறை

ஷட்டர் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கபடும்.

பாஸ்கர், விவசாயி

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை போட தனி நபர் மறுப்பு தெரிவித்து வருகிறார். அவர்கள் வாங்கும் பணத்தில், அதிகாரிகளுக்கும் கட்டிங் போகிறது.

கலைச்செல்வி, கலெக்டர்

இந்த குற்றச்சாட்டுக்கு, ஆய்வு செய்து விட்டு சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் செய்பவர் மீது நடவடிக்கை எடுங்கள்.

சுப்பிரமணி,

நடுவீரப்பட்டு தலைவர்

எங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலையில், வனத்துறையினர் அனுமதி அளிக்காததால், சாலையில் மின் விளக்கு போட முடியவில்லை. இதனால், வழிப்பறி தொல்லை அதிகரித்து வருகிறது.

ரவி மீனா,

மாவட்ட வன அலுவலர்

ஆய்வு செய்துவிட்டு, அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us