/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்...பாராமுகம்!:ரூ.70,000 கோடி வருமானம் ஈட்டியும் அவலம்அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்...பாராமுகம்!:ரூ.70,000 கோடி வருமானம் ஈட்டியும் அவலம்
அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்...பாராமுகம்!:ரூ.70,000 கோடி வருமானம் ஈட்டியும் அவலம்
அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்...பாராமுகம்!:ரூ.70,000 கோடி வருமானம் ஈட்டியும் அவலம்
அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்...பாராமுகம்!:ரூ.70,000 கோடி வருமானம் ஈட்டியும் அவலம்
ADDED : ஜூன் 07, 2024 11:01 PM

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் உள்ளிட்ட ஐந்து சிப்காட் பகுதியில் இருந்து, ஆண்டுதோறும் 70,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு தேவையான சாலை, வாகன நிறுத்தம், தண்ணீர் தொட்டி, விடுதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இழுபறியாக உள்ளது.
சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதால், 30 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.
இதில், எலக்ட்ரானிக், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், டயர், ரசாயனம், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 70,000 கோடிக்கு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளை நம்பி, வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிகின்றனர்.
அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருந்தது. கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கும், வாகன நிறுத்துமிடம் இல்லாமல் இருந்தது. சாலைகளின் அகலம் குறைவாகவும், சிப்காட் பகுதி சுகாதாரமின்றியும் இருந்தது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்புகள், சிப்காட் வாயிலாக அடுத்தடுத்து உருவாக உள்ளன.
இதற்கிடையே, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, கடந்தாண்டு ஸ்ரீபெரும்புதுாரில், சிப்காட் உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது, 'ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், தொழிற்சாலைகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும்' என்றார்.
ஆனால், இதுவரை அதற்கான முன்னேற்ற பணிகள் நடந்ததாக தெரியவில்லை. சாலை, வாகன நிறுத்தம் என ஏராளமான தேவைகள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ளன. இன்று வரை அதற்கான பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
2023 - -24ம் நிதியாண்டில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், 10 கோடி ரூபாய் மதிப்பில், 200 தொழிலாளர்கள் தங்குமிடம் 1.08 ஏக்கரில் கட்டப்பட வேண்டும்
பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில், 2.40 கோடி ரூபாய் மதிப்பில், 0.70 கி.மீ.,க்கு பிள்ளைப்பாக்கம் கிராம சாலை, 8.5 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்
பிள்ளைப்பாக்கத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி 4.85 கோடி ரூபாயில் கட்டப்பட வேண்டும்
ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டில், மூன்று இடங்களில் சரக்கு வாகன நிறுத்தும் இடங்கள், 5.92 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்
வல்லம் சிப்காட்டில், 14.10 கோடி ரூபாயில் வல்லக்கோட்டை-- மேட்டுப்பாளையம் கிராம சாலையை, 18 மீட்டர் விரிவுபடுத்த வேண்டும்.
மேலும், மேட்டுப்பாளையம் கிராம சந்திப்பிலிருந்து, வானுார்தி பூங்கா வரையிலான கிராம சாலை, 10 கோடி மதிப்பில், 18 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த வேண்டும்.
ஒரகடம் சிப்காட்டில், 150 சரக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக, 4 ஏக்கரில், 5.39 கோடியில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட வேண்டும்.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலை பணியாளர்களுக்கு, சிப்காட் வாயிலாக ஏற்படுத்தப்படும் இத்திட்டங்கள் வாயிலாக, தொழிலாளர்களின் அடிப்படை பிரச்னை ஓரளவு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சாலை விரிவுபடுத்துவது, வாகன நிறுத்தம் என, சிப்காட்டிற்கு தேவையான அடிப்படை பணிகள் வேகமெடுக்காமல், அறிவிப்போடு இருப்பதாக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.